வன்முறையை நிறுத்துங்கள்: பிரான்ஸில் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை

நஹெல் ( இடது), நஹெலின் பாட்டி நாடியா ( வலது)
நஹெல் ( இடது), நஹெலின் பாட்டி நாடியா ( வலது)
Updated on
1 min read

பாரிஸ்: பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த17 வயதுடைய நஹெல் என்ற சிறுவன் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறியின் காரணமாக அரங்கேறியதாக நம்பப்படும் இந்தச் சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 45,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஏராளமான பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரம் தொடர்பாக இதுவரையில் 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெலின் இறுதி நிகழ்வு பேரணியில் கும்பத்தினர், நண்பர்களுடன் போராட்டக்காரர்கள் சிலரும் பங்கேற்றனர். பேரணியின்போது நஹெலுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர். ஆனால், நஹெலின் இறுதிச் சடங்குகளுக்கு பின்னரும் பிரான்ஸில் வன்முறைகள் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நஹெலின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கொல்லப்பட்ட நஹெயின் பாட்டி நாடியா கூறும்போது, "இந்த வன்முறைகள் எங்கள் குடும்பத்தாரை பாதித்துள்ளது. பிரான்ஸில் நிகழும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பள்ளிகளும், பேருந்துகளும் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, பிரான்ஸில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பலர் 17 வயதினர் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in