

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 11,40.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையினை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று (ஜூலை 3) கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்கள் வழியாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்து, தண்ணீரை திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், "கிருஷ்ணகிரி அணையில் இருந்து தற்போது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும் வலது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதமும் என மொத்தம் 151 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வருகிற நவம்பர் 9ம் தேதி வரை 130 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகிறது.
இதே போல் பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நேற்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் சுழற்சி முறையில் வருகிற நவம்பர் 14ம் தேதி வரை மொத்தம் 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கன அடி வீதமும் என மொத்தம் 70 கன அடி வீதம் மூன்று நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் தண்ணீர் திறந்துவிடப்படும்.
இதன் மூலம் பாரூர், அரசம்பட்டி, பெண்டரஅள்ளி, கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 ஊராடச்களில் உள்ள 2,397.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வளத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படமாட்டாது. அதன்படி, கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் பெரிய ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரால் மொத்தம் 11,409.42 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே, விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வளத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்." என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) டேவிட்டென்னிசன், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் சையத், காளிபிரியன், தாசில்தார்கள் போச்சம்பள்ளி தேன்மொழி, கிருஷ்ணகிரி சம்பத், நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பெரியமுத்தூர் ஊராட்சி தலைவர் பானுப்பிரியா நாராயணன், திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.