திமுக அரசு Vs ஆளுநர் - வலுக்கும் மோதல் | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 30, 2023

திமுக அரசு Vs ஆளுநர் - வலுக்கும் மோதல் | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 30, 2023
Updated on
2 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்திவைப்பு: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுகிறது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆளுநரின் முடிவை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது: "அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு, முதல்வர் கடிதம் அனுப்ப உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரை சேர்ப்பது மற்றும் நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். இதை தெளிவுபடுத்தி முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுத உள்ளார். தெளிவான விளக்கம் அளித்து முதல்வர் கடிதம் எழுத உள்ளார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என். ரவி எடுத்துள்ள முடிவை, தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு: அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய நிதானமும், மாண்பும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் ஆர்.என்.ரவியிடம் இல்லை. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிற அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநரை ‘டிஸ்மிஸ்’ செய்ய குடியரசுத் தலைவர் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கரூரில் 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம்: கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்பு: தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு ஓய்வு பெற்றதை தொடர்ந்து சிவ்தாஸ் மீனாவிடம் பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார்.

இதேபோல், தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்: ரூ.300 கோடியில் பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், அம்மா குடிநீர் ஆலைகளை சென்னை குடிநீர் வாரியத்திடம் வழங்கவும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மான்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மணிப்பூரில் நிவாரண முகாம் குறித்து ராகுல் கருத்து: இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்தது பற்றிய அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் "அங்கே நான் பார்த்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி, குழந்தையின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் ஒலிக்கிறது. மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி. நம் அனைவரின் முயற்சிகளும் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒன்றிணைய வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மணிப்பூர் முதல்வரின் ராஜினாமா கடிதத்தைக் கிழித்தெறிந்த பெண்கள்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யச் சென்ற வழியில் அவரைத் தடுத்து நிறுத்திய பெண்கள் அவருடைய ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம்?: அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அக்கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்து அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் சுற்றுச்சூழல் ஆய்வுக் குழுவில் கிரெட்டா துன்பெர்க்: ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in