புதிய தலைமைச் செயலர், டிஜிபி நியமனம் முதல் காங்கிரஸுக்கு போன் பே எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 29, 2023

புதிய தலைமைச் செயலர், டிஜிபி நியமனம் முதல் காங்கிரஸுக்கு போன் பே எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 29, 2023
Updated on
2 min read

புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம்: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெள்ளிக்கிழமை ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் முந்தைய திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சிவ்தாஸ் மீனா அவருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அதிகாரி என்பதும், அதிமுக ஆட்சி அமைந்தபோது சிவ்தாஸ் மீனா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு: பாட்னா கூட்டத்துக்கு பிறகு மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், பாஜகவுக்கு சரியான பாடத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், “பிரதமராக இருக்கும் மோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உரையை ஆற்றி இருக்கிறார். குடும்ப அரசியலை நாம் நடத்திக் கொண்டிருப்பதாக. உண்மைதான். இது குடும்ப அரசியல்தான். திமுக என்பது குடும்பம் குடும்பமாக இருக்கிறது. அதை அவர் சொன்னதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், “பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி. எனவே மதப் பிரச்சினையை அதிகமாக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார்” என்று அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்: தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டிஜிபி சி.சைலேந்திரபாபு வரும் வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பணிக்காக இரண்டு முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவரான சங்கர் ஜிவால், சேலம், மதுரை எஸ்.பி., மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். சென்னையின் 108-வது காவல் ஆணையராக சங்கர் ஜிவால் தற்போது தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணாடம் சம்பவம்: தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்: பெண்ணாடம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றை அனுப்பக் கோரி தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸ்... தமிழக டிஜிபி, கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு ‘போன் பே’ நிறுவனம் எச்சரிக்கை: மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள போஸ்டர்களில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்து எச்சரித்துள்ளது.

மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சென்ற நிலையில், அவரது பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சூர்சந்த்பூர் புறப்பட்டுச் சென்றார்.

“9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன்?”: பிரதமர் வலியுறுத்தும் பொது சிவில் சட்டம் எப்படியானது என்றும், அது இந்துக்கள், பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி இருக்கிறதா என்றும், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஏன் இது? என்றும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுரா தேர் விபத்து: நீதிபதி தலைமையில் விசாரணை: திரிபுராவில் புதன்கிழமை தேரில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட விபத்து குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அங்குள்ள ஜெகந்நாதர் கோயிலில் தேர் நிலைக்குத் திரும்பும் விழாவில் தேரின் மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

பற்றி எரியும் பாரிஸ் நகரம்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதனைக் கண்டித்து காவல் துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தன. அப்போராட்டம் வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in