

புதுடெல்லி: பெண்ணாடம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்கள் சிலவற்றை அனுப்பக் கோரி தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், "கடந்த மே 25-ஆம் தேதி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவத்தை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 338-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விசாரணையை ஆணையம் மேற்கொள்ளவிருக்கிறது.
எனவே, தாங்கள் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி, உயிரிழந்த நபரின் மருத்துவ சிகிச்சை ஆவணங்களின் நகல்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையின் விவரம் தொடர்பான குறிப்புகள் ஆகியனவற்றை அவசரமாக தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இவற்றைத் தாங்கள் நேரில் வந்தும் கொடுக்கலாம். இதை நீங்கள் அவசரப் பணியாகக் கருதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் தமிழக தலைமைச் செயலர், தமிழக டிஜிபி, கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
சர்ச்சையின் பின்னணி: கடலூர் மாவட்டத்தில் உள்ளது பெண்ணாடம் பேரூராட்சி. இங்கு, சுய உதவிக் குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவந்த தூய்மைப் பணியாளர் பாபு என்பவர், கடந்த மே 19 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது உடலில் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மே 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
கைதும் கண்டனமும்: இந்நிலையில், பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த 7-ம் தேதி (ஜூன் 7) தனது சமூகவலைதள பக்கங்களில், "மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மனித கழிவு கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக அந்த தூய்மைப் பணியாளர் இறந்துவிட்டார். இந்த விவகாரத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லாத நிலையில் அவதூறு பரப்புவதாக அளித்த புகாரின் பேரில், எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஜி சூர்யா கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில். "எஸ்ஜி சூர்யா, இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர் கருத்துகள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைதுசெய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்து சுதந்திரத்தின் காவலர்கள்போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். பாஜக தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித் துக்கொண்டிருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தேசிய பட்டியலின ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த 26 ஆம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு விவரங்களும் கோரப்பட்டுள்ளன.