

மதுரை: ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போன்றுள்ளது எதிர்கட்சிகளின் மாநாடுகள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் செல்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்திறங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் சாதியை குறித்து விமர்சனம் செய்வதாக கூறப்படும் திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.
நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதில் பத்திரிகையாளர்களுக்கு உரிமை உள்ளது. ஜனநாயக கடமையாகவே செயல்படுகின்றனர். அவர்களை விமர்சனம் செய்யக் கூடாது.
பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் என்பது கடந்த காலங்களில் இதுபோன்று எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர். ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போன்றுதான் இருக்கும்'' என்று அவர் கூறினார்.