சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் முதல் பொது சிவில் சட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 28, 2023

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் முதல் பொது சிவில் சட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 28, 2023
Updated on
2 min read

பிரதமர் மோடியின் பாராட்டை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்: தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டாவது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவற்றையெல்லாம் கருத்திலே கொண்டுதான், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் இன்ஜினாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டியதை நான் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்” என்றார்.

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை, மதுரையில் அரசு கருத்தரிப்பு மையங்கள்: சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அரசு கருத்தரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபையில் வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இந்த விவகாரத்தில் தீர்வுகாண முற்பட்ட காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினரும்,
எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களுக்கும் இடையே நடந்த தகராறுகளால் பரபரப்பு சூழல் நிலவியது.

இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணி முதல் கனக சபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழி பட அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளாமன பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் பெய்தனர்.

இதனிடையே, “இதில் யார் பெரியவர் என்ற பிரச்சினையே இல்லை. இறையன்பர்கள் தெய்வத்தை வழிபடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கமாகும்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு: அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை மாதம் 12-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்த விசாரணையின்போது, நீதிபதி முன்பு காணொலி வழியாக செந்தில் பாலாஜி ஆஜரானார்.

பண்ணை பசுமை கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை: தமிழகத்தில் தக்காளி விலை நூறு ரூபாயை எட்டிய நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னையில் mSiren ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம்: சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் இணைந்து 'கோல்டன் ஹவர்' சவாலை சமாளிக்க எம்-சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி சரத்கர் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்தார். 'கோல்டன் ஹவர்' நேரத்துக்குள் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ திட்டம் பயனுள்ளதாக அமையும்.

தற்போது காவேரி, ரேலா மற்றும் குளோபல் ஆகிய மூன்று தனியார் மருத்துவமனைகளில் 25 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16 போக்குவரத்து சந்திப்புகளில் இச்சேவை இணைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

“பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது”: "கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொது சிவில் சட்டம் முன்மொழிவை தீவிரமாக எதிர்ப்பது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முடிவெடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த வாரியத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாஜக ஐடி பிரிவு தலைவர் மீது வழக்குப் பதிவு: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குறித்து ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொழியாததால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதே நிலை அடுத்த இரு வாரங்களுக்கு நீடித்தால் மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர், மண்டியா, பெல்லாரி, விஜயபுரா உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறப்பதிலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in