

சென்னை: சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அரசு கருத்தரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.5.89 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கொண்ட ஒரு புதிய கட்டிடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.5.89 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கொண்ட ஒரு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட ஏராளமான பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். வருகிறவர்கள் தங்களுடைய குழந்தைகளை மருத்துவமனைகளில் அனுமதித்து விட்டு அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளின்றி பெரியளவில் அவதிப்பட்டு வருகிறார்கள்.
முதல்வர் வழிகாட்டுதலின்படி 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கலைஞர் நினைவு பன்னாட்டு மாராத்தான் போட்டியில் 43,231 பேர்கள் பங்கேற்றார்கள். பங்கேற்றவர்கள் பதிவு கட்டணமாக தலா ரூ.300/- செலுத்தியிருந்தார்கள். செலுத்தியவர்களின் பதிவு கட்டணத்தில் சேவை வரி போக ரூ.1,22,02,450 தொகை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பதிவு கட்டணத்தை ஏதாவது ஒரு முக்கியமான காரியத்திற்கு செலவிடலாம் என்று தெரிவித்தபோது எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இதுபோன்ற நிலை இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக முதல்வர், எழும்பூரிலேயே அந்த காத்திருப்பு அறை, உணவு வழங்கும் அறை போன்ற பல்வேறு வசதிகளை இந்த தொகை கொண்டு நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரை அணுகி, இந்த ரூ.1,22,02,450 தொகை தரப்பட்டு இருக்கிறது. இதில் நமக்கு நாமே என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும். அதுவும் மாநகராட்சியின் சார்பில் என்ற சொன்னவுடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசி, இன்றைக்கு ரூ.5.89 கோடி செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குழந்தை பேறு விவகாரத்தில் பெரும் பணச் செலவில் மாட்டிக் கொண்டு அவதியுறும் நிலையை அறிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2022-23ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை எழும்பூரிலும் மற்றும் மதுரையிலும் அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை மிக விரைவில் வர உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு மக்கள் பயனுறும் வகையில் பயன்பாட்டிற்கு வர உள்ளது" என்று அவர் கூறினார்.