Last Updated : 25 Jun, 2023 05:18 PM

1  

Published : 25 Jun 2023 05:18 PM
Last Updated : 25 Jun 2023 05:18 PM

வரலாற்றை குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது: நடிகர் நாசர்

புதுச்சேரி: வரலாற்றையும், உணர்வுகளையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்ற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினைக் கிராமத்தில் தனியார் இயக்கம் ஒன்றின் 10-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் இயக்கத்தின் இயக்குநர் ராமசாமி வரவேற்றார். நாடக மற்றும் திரைக்கலைஞர் மு.ராமசாமி முன்னுரை வழங்கி பேசினார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான நாசர் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது: பெற்றோர் தங்கள் குழந்தைகளை நவீன நாடகங்களில் ஈடுபடுத்த வேண்டும். உங்களை(மக்களை) சிந்திக்க வைப்பது தான் நவீன நாடகங்களின் சிறப்பு.

ஒரு குழந்தை பரத நாட்டியத்தை கற்றுக்கொள்வதைவிட அதனுடைய சரித்திரத்தை கற்றுக்கொள்ளும்போது தான் பலமான ஆளுமையாக வர முடியும். பழக்கப்படுத்துவதால் அனைத்தும் வந்துவிடும். ஆனால் வரலாற்றையும், உணர்வுகளையும், நம்மை சுற்றி நடக்கின்ற விஷயங்களையும் குழந்தைகள் மனதில் திணிக்கக்கூடாது. அவர்களாகவே சுயமாக சிந்தித்து முடிவெடுக்கின்ற தெளிவுடையவர்களாக வர வேண்டும் என்பது தான் பெற்றோரின் கனவாக இருக்க வேண்டும். ஒரு கலையினுடைய உருவம் உருவாவதற்கு, அது வடிவம்பெற்று முழுமை பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

இந்த நவீனயுகத்தில் அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய ஒரு கலை இந்த நவீன நாடகங்கள் தான். இன்றைக்கு குழந்தைகளுக்கு கவனச் சிதறல்கள் அதிகளவு இருக்கின்றன. கவனக்குவியல்களை பெற நவீன நாடகங்கள் முக்கியம். இன்றுள்ள குழந்தைகளுக்கு தொடர்பு திறன் மிக அவசியம். இதுபோன்ற திறன்களை உறுதியாக சொல்லும் பயிற்சி இந்த நவீன நாடகங்கள் மூலமாகத்தான் கிடைக்கும். புதுச்சேரியில் மிகச்சிறந்த நாடகப்பள்ளி இருக்கிறது. தமிழகத்தில் கூட இதுபோன்ற நாடகப்பள்ளிகள் இல்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் அதில் நிறைய பேர் படித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.

முறையாக படித்த ஒவ்வொரு நாடகப் பட்டதாரியும் தன்னுடைய குழந்தைகளை அறிவு உள்ளவராகவும், தைரியமானவராகவும், சுயமாக சிந்திக்கின்றவர்களாகவும் மாற்ற முடியும். ஆகவே நவீன நாடகங்கள் குறித்து அனைவரும் தங்கள் வீடுகளில் விவாதிக்க வேண்டும். தங்களுக்குள் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விழாவில் பாரதிதாசனின் ''இரணியன் அல்லது இணையற்ற வீரன்'' என்ற நாடகம் நடைபெற்றது. இதனை நடிகர் நாசர் உள்ளிட்ட பலர் கண்டுகளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x