

சென்னை: துப்புரவு பணியாளர்கள் நியமனத்துக்கான ஒப்பந்த நடைமுறையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும் என்று தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் தேசியதுப்புரவுப் பணியாளர்கள் ஆணையம் (சஃபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையம்) தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வார பயணமாக தமிழகம் வந்துள்ளோம். தெற்கு ரயில்வேயின் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் 2 கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
கர்நாடகா, திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில அளவிலான தூய்மை பணியாளர் ஆணையம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் மாநில அளவிலான தூய்மை பணியாளர்களுக்கு ஆணையம் வேண்டுமென 2 மாதங்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்தேன். இதை தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம். இதுகுறித்து முதல் வரை சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளோம்.
பணியாளர் ஆணையம் வேண்டும்: தமிழகத்தில் தூய்மை பணியாளர் நலவாரியம் உள்ளது. ஆனால், பணியாளர் ஆணையம் வேண்டும் என்றே கேட்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. வாரியத்துக்கு இல்லாத அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு.
ஒப்பந்த நடைமுறையை ஒழிக்க வேண்டும். ஏனெனில், உயிரிழக்கும் ஊழியர்களுக்கு காப்பீடு கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்கூட அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. குறைவான சம்பளம் கொடுத்து, அதிக நேரம் வேலை வாங்குவார்கள். எனவே, ஒப்பந்த நடைமுறையை ஒழித்து அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இல்லையெனில் மாநகராட்சி, நகராட்சியின் கீழ் நேரடியாக சம்பளம் பெறும் நடைமுறையின் கீழ்அவர்களைக் கொண்டுவர வேண்டும்.
கால்வாய் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டும். மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தரமான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.