

ராமநாதபுரம்: பத்திரப் பதிவுத்துறையில் இந்தாண்டு இதுவரை ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர் ஆகிய 4 பதிவு மாவட்டங்களுக்கான பதிவுத்துறை சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து ஆய்வு செய்தார்.
பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவர் ஜாபர் சாதிக், மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள், சார்-பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.
சீராய்வுக் கூட்டத்துக்கு பின், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்தாண்டு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் ரூ.1.51 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை பதிவுத் துறையில் ரூ.25,000 கோடியும், வணிகவரித் துறையில் ரூ.10,032 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
2,500 போலி பத்திரங்கள்: தற்போது, போலிப் பத்திரப் பதிவு ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி, இதுவரை 2,500 போலிப் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்ற விதி உள்ளது. இடைத்தரகர்கள் மூலம் பதிவுத் துறையில் தவறு நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு செய்பவர்கள் அவர்களே வந்து அலுவலகத்தில் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.