

சென்னை: கவிஞர் கண்ணதாசனின் 97-வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணதாசன் படத்துக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ-க்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறோம்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி கொடுத்து, அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இதேபோல, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: வாழும்போதும் வரலாறு படைத்து, மரணத்துக்குப் பின்னர் மக்கள் மனதில் தினமும் உலா வரும் உன்னதக் கவிஞர் கண்ணதாசன். அவரது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூல், இந்து மதத்தின் பல்வேறு கருத்துகளையும் தெளிவாக விளக்குகிறது.
அவரது வனவாசம் புத்தகம், தமிழக அரசியலின் மறுபக்கத்தை வெளிக்காட்டியது. கண்ணதாசனின் பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றுவோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காலத்தால் அழியாத பாடல்களைத் தந்து, தமிழக மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாளில், அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பாடல் வரிகள் இன்றும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வரிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.