

சென்னை: வெளிப்படைத்தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்ய முடியுமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சையை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் சூழலில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு ஆகியோரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும். வெளிப்படைத்தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் செய்ய முடியுமா ?" என்று பதில் அளித்தார்.