Published : 24 Jun 2023 06:41 AM
Last Updated : 24 Jun 2023 06:41 AM

பக்ரீத்: குந்தாரப்பள்ளி, மோர்பாளையம் சந்தைகளில் ரூ.10.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

கிருஷ்ணகிரி / நாமக்கல்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று குந்தாரப்பள்ளி, மோர்பாளையம் கால்நடைச் சந்தைகளில் ரூ.10.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை வரும் 29-ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், நேற்று வழக்கத்தை விட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து கொண்டு வந்திருந்தனர். அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார், ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர், தமிழகத்தில் வேலூர், சென்னை, கடலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருச்சி, தருமபுரி போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்படும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ.15 ஆயிரம் முதல், ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது. குறைந்த பட்சம் ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.65 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று கிடா ஆடுகளை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், நேற்று ஒரே நாளில் ரூ.7.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் வாரம் தோறும், வெள்ளிக்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. இங்கு ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்டவற்றை விற்கவும், வாங்கவும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகை நெருங்குவதால், நேற்று நடந்த சந்தையில் விற்பனை களைகட்டியது. நாட்டு வெள்ளாடு, ஜமுனா வெள்ளாடு, நாட்டு செம்மறியாடு, துவரம் செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை வாங்க சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை ஆடுகள் விலை போயின.

இதுகுறித்து, ராசிபுரத்தைச் சேர்ந்த வியாபாரி மணிமுத்து கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

இதர சந்தைகளைக் காட்டிலும், இங்கு ஆடு விலை குறைவாகக் கிடைக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகள் வந்துள்ளனர். வழக்கமாக ரூ.1 கோடி வரை வியாபாரம் நடக்கும் நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக ரூ.3 கோடிக்கு மேலாக வியாபாரம் நடந்துள்ளது’ என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x