பழநியில் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

பழநியில் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடியில் வரத்து அதிகரிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை விவசாயிகள் குப்பையிலும், சாலையோரமும் கொட்டிச் சென்றனர்.

பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 எக்டேர் பரப்பளவில் லக்னோ-49 மற்றும் பனாரஸ் ரக கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கொய்யாவுக்கு தனி கிராக்கி உண்டு. கொய்யாவுக்கென பிரத்யேகமாக, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் தனிச் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் அனைத்து கொய்யாவும் விற்பனை செய்யப்பட்டு விடும். நாள்தோறும் 30 டன் கொய்யா விற்பனையாகும்.

இங்கிருந்து வெளி மாவட்டம், வெளிமாநில வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். நேரடி விற்பனை என்பதால் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாள்தோறும் அதகளவில் வருகின்றனர். தற்போது கொய்யா சீசன் தொடங்கியுள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. அதே சமயம், மாம்பழ சீசன் இன்னும் நிறைவடையாததால் கொய்யாவுக்கு மவுசு குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வராதததால் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

தற்போது ஒரு பெட்டி கொய்யா (22 கிலோ) ரூ.400 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கொய்யா பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாததால் விற்பனைக்காக கொண்டு வந்த கொய்யா பழங்களை விவசாயிகள் குப்பையிலும், சாலையோரத்திலும் கொட்டிச் சென்றனர்.

இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது: "கொய்யா சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது. வெளியூர் வியாபாரிகளும் வராததால் விலை சரிந்துள்ளது. கூலி ஆட்களை வைத்து கொய்யாவை பறித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. கூலிக்கு கூட விலை கட்டுப்படியாகாதது கவலை அளிக்கிறது. கொய்யாவை சேமித்து வைத்தும் விற்பனை செய்ய முடியாது என்பதால் வேறு வழியின்றி குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in