விஜய் குறித்த திருமாவளவன் கருத்து முதல் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 21, 2023

விஜய் குறித்த திருமாவளவன் கருத்து முதல் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 21, 2023
Updated on
3 min read

கரூர் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு: கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வீரணம்பட்டி காளி கோயிலில் கடந்த 6-ம் தேதி கோயில் திருவிழா தொடங்கியது. 7-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கோயிலில் உள்ளே வழிபாடு செய்ய சென்றபோது அவர்கள் அவரை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் எழுந்ததை அடுத்து ஒரு தரப்பினர் கோயிலை பூட்டினர். பின்னர், பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் மறுநாள் கோயிலை திறந்ததால் அப்போதைய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி கோயிலுக்கு சீல் வைத்தார். இதனை தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக கோயிலின் சீலை ஆட்சியர் த.பிரபுசங்கர் அகற்றி பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் பட்டியலின மக்கள் சார்பில் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெற்றது.

அதேவேளையில், கோயில் சீலை அகற்றி திறக்கவும், பட்டியலின மக்களை அனுமதிக்கவும் ஒப்புக்கொண்ட மற்றொரு தரப்பினர், கோயிலினுள் செல்லாமல் கோயிலுக்கு வெளியிலேயே நின்றுக் கொண்டனர்.

திரவுபதி அம்மன் கோயிலை திறக்கும் கோரிக்கையை ஏற்க ஐகோர்ட் மறுப்பு: சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், கோயில் விவகாரத்தில் அறநிலையத் துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதுதொடர்பாக அறநிலையத் துறையை அணுக மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

பாட்னா கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்: பிஹாரில் வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் 500 டாஸ்கள் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில்பாலாஜிக்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை நிறைவு: சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதன்கிழமை அதிகாலை ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த சிகிச்சை அதிகாலை 4.30 மணி முதல் காலை 10.15 மணி வரை நடந்தது. சிகிச்சைப் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை வெளியிட்டது. அதில் "இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி: செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற விசாரணையை ஏன் சந்தேகிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

செந்தில்பாலாஜியை 16 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு, 8 நாட்கள் அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, கோடைக்கால சிறப்பு அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்றத்தை அமலாக்கத் துறை ஏன் சந்தேகிக்க வேண்டும்? வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றத்தில் தொடரலாமே? தற்போதைய நிலையில், வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதுதான் சரியாக இருக்கும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்" என்று தெரிவித்தது.

அரிசி வழங்க மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: காங்கிரஸ்: கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

‘முரண்களை யோகா மூலம் முறியடிக்க வேண்டும்’- பிரதமர் மோடி: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாம் யோகா மூலம் முரண்களை முறியடிக்க வேண்டும், எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும், தடுப்புகளை தகர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான எலான் மஸ்க், பிரதமர் மோடியை நியூயார்க் நகரில் சந்தித்தார். இதுகுறித்து எலான் மஸ்க் குறிப்பிடுகையில், “நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவுக்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதேபோல புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குவது மற்றும் ஆதரவாகவும் இருக்கிறார். அவருடனான இந்த சந்திப்பின் போது நாங்கள் சிறப்பு வாய்ந்த பல விஷயங்களை பேசினோம். அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு வர உள்ளேன்” என்று தெரிவித்தார்.

அரசியலில் விஜய் - திருமாவளவன் கருத்து: அரசியலுக்கு வருவதற்கான நடிகர் விஜய்யின் முன்னெடுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் எந்தப் பருவத்திலும் வரலாம். அதில் தவறில்லை. ஆனால், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். கள வேலை செய்ய வேண்டும். பின்பு ஆட்சி குறித்து கனவு இருக்க வேண்டும்.

பொதுவாக, திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமா என்ற பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவில் மற்ற எங்கும் இப்படியில்லை. தமிழகத்தில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து, இறுதியில் மார்க்கெட் இல்லாதபோது அரசியலுக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து மக்களை எளிதாக கவர்ந்துவிடலாம் என நினைக்கிறார்கள். அப்படியில்லாமல் தொண்டுள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

கோல்வால்கரை படிங்கள், சாவர்க்கரை படிங்கள் என்று சொல்லாமல் அம்பேத்கர், பெரியாரை படிக்க சொன்னதற்கு விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று திருமாவளவன் கூறினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in