கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜெயராம் ரமேஷ் | கோப்புப் படம்
ஜெயராம் ரமேஷ் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, அன்ன பாக்யா என்ற அந்தத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து, வெளிச் சந்தையில் அரசி வழங்குவதை நிறுத்துவதாக இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்தார். இது பழிவாங்கும் நடவடிக்கை என அவர் விமர்சித்தார். இந்திய உணவுக் கழகத்தின் இந்த முடிவால், அன்ன பாக்யா திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சித்தராமையா கூறி இருந்தார். இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "நரேந்திர மோடியின் ஏழைகளுக்கு எதிரான மற்றும் பழிவாங்கும் அரசியல் குறித்த சமீபத்திய பட்டியல் இது:

மே 13, 2023: பிரதமர் மற்றும் பாஜகவை கர்நாடக மக்கள் முழுமையாக நிராகரித்தனர்.

ஜூன் 2, 2023: ஏழைக் குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் அன்ன பாக்யா திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்தார்.

ஜூன் 13, 2023: திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தில் இருந்து அரிசி விற்பனை செய்வதைத் தடை செய்யும் சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அன்ன பாக்யா திட்டத்தை சிதைப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

இந்திய உணவுக் கழகத்திற்கு 100 கிலோ அரசிக்கு ரூ.3400 கொடுக்க கர்நாடகா தயாராக இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. அதேநேரத்தில், எத்தனால் உற்பத்திக்காகவும், பெட்ரோல் கலப்பிற்காகவும் 100 கிலோ அரிசியை ரூ.2,000 ரூபாய்க்கு இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து விற்பனை செய்கிறது. உணவுப் பாதுகாப்பு என்பது எல்லா நேரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in