

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். திங்கள்கிழமை காலை வரை, கட்நத 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக, மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழை அளவு இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிப்புகளா?: கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் எவ்வித சேதமும் இல்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி, மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.'
அதேவேளையில், “சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கனமழை காரணமாக சென்னையில் 127 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், 6 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீர் கனமழைக்கான காரணம் என்ன?: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியே இந்த மழைக்கு காரணம். தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி காற்று சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்து. இதன் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி மெதுவாக நகர்ந்து கொண்டு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை முன்னறிவிப்பு: வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் பேருந்து விபத்தில் 4 பேர் பலி; 96 பேர் காயம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் திங்கள்கிழமை தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 96 பேர் காயமடைந்த நிலையில், கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ED முறையீடு: செந்தில் பாலாஜிக்கு வழக்கில் சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கோடைக்கால சிறப்பு அமர்வு ‘அமலாக்கத் துறை மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். ஆனால், இது கோடைக்கால சிறப்பு அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, செவ்வாய் அல்லது புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தது.
வெப்ப அலை தாக்கம்: 3 மாநிலங்களில் 100 பேர் பலி: வெப்ப அலை காரணமாக உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் 100 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சூழலில், வரும் காலங்களில் இப்படியான வெப்ப அலை மரணங்கள் ஏற்படலாம் என்பதால் அரசு நீடித்த நிலையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காலிஸ்தான் புலிப்படை தலைவர் கனடாவில் சுட்டுக்கொலை: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர், கனடாவில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இந்து மதகுரு ஒருவரை தாக்கியதாக இவர் மீது வழக்கு உள்ளது.
கீதை பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது - காங்கிரஸ் Vs பாஜக: மத்திய அரசின் காந்தி அமைதி விருதுக்கு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் இயங்கி வரும் கீதை பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காந்தி அமைதி விருதுக்கு கீதை பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்து. இது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் விருது கொடுப்பதைப் போன்றது என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
இதனைக் கண்டித்துள்ள பாஜக, “மாவோயிச சிந்தனை உள்ளவர்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. முத்தலாக் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கீதை பதிப்பகம் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் கருத்து வெட்ககரமானது” என்று தெரிவித்துள்ளது.
பவானி தேவி சாதனை: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த 29 வயதான இந்திய வீராங்கனை பவானி தேவி. இந்தத் தொடரின் வெண்கலம் வென்ற இவர் தனது காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான மிசாகி எமுராவை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.