Published on : 19 Jun 2023 15:21 pm

சென்னையில் இடைவிடாத கனமழை - போட்டோ ஸ்டோரி

Published on : 19 Jun 2023 15:21 pm

1 / 26
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை தொடரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. | படங்கள்: ஆர். சதிஷ்பாபு, எம். ஸ்ரீ நாத்
2 / 26
ஞாயிற்றுக்கிழமை மாலைக்குப் பிறகு மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இரவுக்கு மேல் சென்னை மாநகரம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளின் சாலைகளில் தண்ணீர் தேங்கின.
3 / 26
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
4 / 26
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5 / 26
இதே போல திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது.
6 / 26
காலையிலும் மழை விடாமல் நீடித்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 19) விடுமுறை அளிக்கப்பட்டது.
7 / 26
27 ஆண்டுகளுக்குப் பின்னர்... - “1991, 1996 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது 2023 ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளது.
8 / 26
27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
9 / 26
கடலில் இருந்து நகர்ந்துவரும் மேகக்கூட்டங்கள் காரணமாக மழை பெய்து வருகிறது” என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
10 / 26
வரலாறு காணாத வெப்ப அலை வீசிய பின்னர் இயற்கை அதை சமன் செய்வதற்காக இது போன்ற மழை பெய்வது வழக்கம். ஆனாலும் கடலில் இருந்து மழை மேகங்கள் வருவதைப் பார்ப்பது கனவு போன்றது. 1996க்குப் பின்னர் சென்னையில் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1996 ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்கு மழை விடுமுறை விடப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது" என்று 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
11 / 26
1913-ல் புகார் கூறலாம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரையிலும் மழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 / 26
தொடர்மழை காரணமாக சென்னையில் மழை நீர் தேக்கம் போன்ற புகார்களுக்கு மக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
13 / 26
“சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. தொடர்ந்து அதிகாரிகளுடன் மழை பாதிப்பு தொடர்பாக பேசி வருகிறேன். தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
14 / 26
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 / 26
நேற்று (ஜூன் 18) காலை 8.30 மணி முதல் இன்று (ஜூன் 19) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ, ஆலந்தூர் மற்றும் தரமணியில் தலா 14 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ, கிழக்கு தாம்பரம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, குன்றத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ, சென்னை கொரட்டூர் மற்றும் எம்ஜிஆர் நகரில் தலா 8 செ.மீ, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
16 / 26
கனமழை காரணமாக சென்னையில் 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 6 மரங்கள் விழுந்துள்ளன. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் பொதுமக்களிடம் இருந்து 158 புகார்கள் வந்துள்ளன. சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீரை வெளியேற்ற 593 பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 / 26
சென்னையில் பருவ மழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி மழை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
18 / 26
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிவ் தாஸ் மீனா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களில், "சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்கப்பாதைகளை தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். மரங்களை அகற்ற அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி இந்த மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
19 / 26
“இந்த மழை வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக பெய்துள்ளது. தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி காற்று சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்து. இதன் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி மெதுவாக நகர்ந்து கொண்டு உள்ளது” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
20 / 26
“கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை சேதம் இல்லை. பருவம் தவறிய மழை மற்றும் திடீர் மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
21 / 26
தமிழகத்தில் இன்று (ஜூன் 19) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 / 26
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23 / 26
20-ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24 / 26
21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25 / 26
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
26 / 26
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Recently Added

More From This Category

x