

பழநி: மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குவதற்காக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தவிருக்கும் பாஜக, தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தொப்பி, துண்டு, பேட்ஜ் அடங்கிய ‘பூத் கமிட்டி கிட்’ வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பாஜக பூத் கமிட்டிகளை அமைத்து, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தற்போது முடுக்கிவிட்டுள்ளது. இதில், தொகுதி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வது, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக் கூட்டம், தெருமுனைப் பிரச்சாரம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், பொதுமக்களை சந்தித்து அதை வாக்குகளாக மாற்றுவதற்காக, ஜூன் 23 முதல் 30-ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளாக மாற்றும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பூத் கமிட்டி கிட் வழங்கல்: பிரச்சாரத்துக்கு செல்லும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட தலா 2 தொப்பி, துண்டு, தாமரை வடிவிலான பேட்ஜ், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கான துண்டுப்பிரசுரம், அதனை வைக்க பிரதமர் நரேந்திர மோடி படம் பொறித்த துணிப்பை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சாதனைகளை விளக்க மக்களை சந்திக்கச் செல்லும் நிர்வாகிகள் தொப்பி, துண்டு, பேட்ஜ் அணிந்து செல்லவும், பாஜகவுக்கு வாக்கு அளிப்பதை உறுதி செய்யவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பாஜகவினர் தெரிவித்தனர்.