

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டிஜிபி அலுவலகத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.சங்கரை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சந்தித்தார்.
பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, தமிழகத்தில் 2021-ல் இருந்து தேசிய மகளிர் ஆணையத்துக்கு, 730 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், மேல் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக, தமிழக காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கரை நேரில் சந்தித்தேன். புகார்கள் மீதான மேல் நடவடிக்கை குறித்து ஒருமாதத்தில் அறிக்கை அளிப்பதாக கூறியுள்ளார்.
6 மாநில பொறுப்பு: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். பெண்கள் பொம்மையோ, பொருளோ அல்ல. பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும். எனக்கு தமிழகம் உட்பட 6 மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை குறித்த புகார் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட, ராணுவ வீரர் மனைவி அளித்த புகார் தொடர்பாக விரைந்து விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குஷ்பு கூறினார்.