

புதுச்சேரி: புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 198 மில்லியன் கன அடியாகும். இது புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்த ஏரி ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையின் போதும் முழு கொள்ளளவை எட்டும்.
தமிழகப் பகுதியில் உள்ள சொர்ணாவூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு வந்தடைகிறது.
இந்தத் தண்ணீரை சேமிக்கும் வகையில் அரங்கனூர் கலிங்கல் பகுதியில் 20 செ.மீ உயரம் கொண்ட மூன்று கட்டைகள் போட்டு 3.6 மீட்டர் வரை, அதாவது 193.47 மில்லியன் கன அடி நீரை பொதுப்பணித்துறையினர் சேமிப்பர்.
இந்த கலிங்கல் பகுதியில் பாலம் அமைத்து, கரைகளை இணைத்து ஏரியைச் சுற்றி சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 மாதத்துக்குள் பாகூர் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலிங்கல் பகுதியில் பாலம் அமைத்து கரைகளை இணைக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பாகூர் ஏரியில் 40 மீட்டர் தூரமுள்ள கலிங்கல் பகுதியில் பாலம் அமைத்து, கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்திட ரூ.8 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதனை பரிசீலித்த அரசு இத்திட்டத்தை நபார்டு வங்கி கடனுதவியுடன் செயல்படுத்த முடிவு செய்து, நடவடிக்கை மேற் கொண்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பாகூர் ஏரியின் கலிங்கல் பகுதியில் பாலம் கட்டும் பணிமேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, தமிழக பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாய சங்கங்கள் தரப்பில் கூறும்போது, “கலிங்கல் பகுதியில் பாலம் கட்ட வேண்டுமென 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டு வருகிறோம். இங்குள்ள கரைகளை இணைத்து பாலம் அமைத்தால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும்.புதுச்சேரி, தமிழகப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் பயன்பெறுவர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏரியில் மீன்பிடி ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.1.27 கோடி கிடைத்தது. இதில் 50 சதவீதம் சங்கத்துக்கும், 50 சதவீதம் அரசுக்குமானது.
அப்போது இத்தொகை கொண்டு பாலம் கட்டுவதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்து விட்டனர். அதன்பிறகு பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறவில்லை. இந்த பாலம் அமைத்தால் ஏரியின் சுற்றுலாவும் வளர்ச்சி பெறும்” என்றனர்.
பொதுப்பணித் துறை நீர்பாசனப் பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது. “நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பலமுறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இப்பணியை எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது, டெண்டர் விடும் பணி முடிந்துள்ள நிலையில், பணி தொடங்குவதற்கான அனுமதி வழங்கியதும் விரைவில் பணியை ஒப்பந்ததாரர் தொடங்குவார்.
மேலும் ஏரியைச் சுற்றிலும் தார்ச் சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
அவர்கள் கூறுவது படியே பணிகள் விரைவில் தொடங்கி, பாலம் அமைக்கப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.