

சென்னை: பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகரைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர், இந்து தமிழ் திசை நாளிதழின் உங்கள் குரல் சேவை தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது: சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், 71-வது வார்டு, பெரம்பூர் மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகரில் 16 தெருக்கள் உள்ளன. இப்பகுதி முழுவதும் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதி. இங்கு மாநகராட்சி சார்பில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வீடு வீடாக வந்து குப்பையை பெற்றுச் செல்லவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் தெருக்களில் குப்பையை கொட்டிவருகின்றனர். இதனால் எல்லா தெருக்களிலும் குப்பையாக கிடக்கின்றன. இப்பகுதியில் கடும் தூர்நாற்றமும், ஈக்கள் தொல்லையும் தற்போது அதிகரித்துள்ளது. வீடுகளில் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.
இப்பகுதியில் குப்பை அகற்றப்படாதது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் தினமும் வீடு வீடாக வந்து குப்பைகளை பெற்றுச் செல்லவும், ஏற்கெனவே தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் பகுதியில், பெரம்பூர் நெடுஞ்சாலையில் 7 குப்பைத் தொட்டிகள் இருந்தன. அந்த சாலை, மேயர் பிரியா தினமும் செல்லும் சாலை, முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்கு செல்லும் சாலை எனக்கூறி, அவர்களின் கண்களில் குப்பை தொட்டிகள் தென்படக்கூடாது என்பதற்காக அவற்றை கொண்டு வந்து, அருந்ததியர் நகர் பகுதியில் உள்ள குறுகலான கோவிந்தன் தெருவில் வைத்துள்ளனர். இந்த தொட்டிகளில் உள்ள குப்பைகளை அகற்ற வரும் கனரக லாரிகளால், அந்த தெரு அடைபட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அந்த தெரு, ரயில் பாதையை கடந்து ஏஏ ரோடு மற்றும் பிபி ரோடை அடையும் முக்கிய தெருவாகும். ஏராளமான இருசக்கர வாகனங்கள் இந்த வழியாக தான் இயக்கப்படுகின்றன. இந்த தெருவில் 7 குப்பைத் தொட்டிகளை வைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுவது தொடர்பாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்.
ஆனால் இதுவரை இது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அருந்ததியர் நகர் பகுதியில் குப்பை அகற்றும் பணியாளர் உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களாக பணிக்கு வரவில்லை. உடனடியாக அப்பகுதியில் ஆட்களை அனுப்பி குப்பைகளை அகற்றிவிடுகிறோம்.
பிரதான சாலைகளில் குப்பை தொட்டிகளை வைக்கக்கூடாது என்று மாநகராட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால் உட்புற தெருக்களில் குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறோம். அதை வேறு இடத்தில் வைப்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.