செந்தில்பாலாஜி கைது | அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது - புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

செந்தில்பாலாஜி கைது | அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது - புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி
Updated on
1 min read

பழநி: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத்துறை தன்னுடைய கடமையை செய்துள்ளது என்று, பழநியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சொல்ல முடியாது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்தது போல் நாடகமாடுகிறார். அவர் முறைகேடாக சம்பாதித்த கோடிக் கணக்கான ரூபாயை பல்வேறு நாடுகளுக்கு ஹவாலா மூலமாக பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வருகிறது.

அமலாக்காத்துறை தன்னுடைய கடமையை செய்து வருகிறது. செந்தில் பாலாஜியை உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். கடந்த 2016-ல் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டி பேசிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் திமுகவிற்கு வந்துவிட்டதால் புனிதராகி விடுவார்களா?.

நீட் தேர்வில் சென்னை மாணவர் பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர். 78,693 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகமான மாணவர்கள் இந்திய அளவில் அதிக இடங்களை பெறுவர்.

திமுகவின் பகுத்தறிவுக்கும், முற்போக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பகுத்தறிவற்ற செயல்களில் மட்டுமே திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக மக்களை சினிமா, மது மயக்கத்திற்கு அடிமையாக்கி திமுக ஆட்சி நடத்துகிறது. தற்போது இளைஞர்களிடம் சினிமா மோகம் குறைந்து வருவதால் டாஸ்மாக்கிற்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்ததுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in