

சிவகாசி: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை தோல்விக்கு காரணமாக இருந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்தார்.
சிவகாசி மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம் திறப்பு விழா, மாரனேரி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோல்வி அடைந்ததற்கு காரணமாக இருந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
2011-2016 அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்கில், தற்போது தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அமித் ஷா சென்னை வந்து சென்ற சில நாட்களில் இந்த சோதனை நடைபெற்று உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு அமித் ஷாவும், அண்ணாமலையும்தான் முழு காரணம்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே உட்பட 4 துறைகளை கவனித்து வருகிறார். அதனால் அவரால் ரயில்வே துறையின் மீது முழு கவனம் செலுத்த முடியவில்லை. ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும். பட்டாசு, எய்ம்ஸ் உட்பட பல விஷயங்களில் அமித்ஷா தமிழகம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுகிறார்.
தமிழனை பிரதமர் ஆக்குவோம் என அமித் ஷா கூறுவது ஏமாற்று வேலை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்ணமாலை பாஜக தலைவராக இருந்து, அதிமுக கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால், திமுக கூட்டணி 40 இடங்களில் வெல்வது உறுதி.
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுற்றுச்சாலை பணிக்கு இன்னும் 3 மாதங்களில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். அடுத்த பத்து மாதங்களில் மத்தியில் ஆட்சி மாறியவுடன் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்'' என்றார். எம்.எல்.ஏ அசோகன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநகர் தலைவர் சேர்மத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.