துரித உணவுகளை தவிர்த்தால் 80 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் - அரசு விழாவில் வேளாண் அமைச்சர் பேச்சு

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் நடந்த அரசு விழாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். மற்றொரு படம், அரசு விழாவில் சிறுதானியக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் நடந்த அரசு விழாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். மற்றொரு படம், அரசு விழாவில் சிறுதானியக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Updated on
1 min read

தருமபுரி: துரித உணவுகளின் பின்னால் செல்வதை தவிர்த்தால் 80 வயது வரை ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என தருமபுரியில் நடந்த அரசு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

தருமபுரி மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று(12-ம் தேதி) மாலை நடந்தது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த இந்நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் அரிசியில் 2 கிலோவை குறைத்து அதற்கு மாற்றாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு 451 பயனாளிகளுக்கு ரூ.3.44 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய உணவுப் பொருட்களின் கண்காட்சி அரங்கையும் அமைச்சர் பார்வையிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: சிறுதானியங்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்ட நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைவான ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். காலப்போக்கில் உணவுமுறை மாறியது. சிறுதானிய உணவுகள் மறக்கப்பட்டன. மேலும், வாகனங்கள், இயந்திரங்களின் பெருக்கத்தால் வாழ்க்கை முறையும் மாறி உடல் உழைப்பு குறையத் தொடங்கியது. இதனால், இன்று பலரும் நீரிழிவு நோயால் சிரமப்படுகிறோம். இது ஆயுளையும் பாதிக்கிறது.

அதிக சுவை தரும் உணவுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. துரித உணவு வகைகள், பீட்சா போன்றவை சுவையாக இருந்தாலும் அவை உடலுக்கு நன்மை தருவதில்லை. இவ்வகை உணவுகளுக்கு பின்னால் செல்வதை தவிர்த்தால் 80 வயது வரை ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும். எனவே, சிறுதானிய உணவுகளின் மீது கவனத்தை திருப்புங்கள்.
.
சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 678 ஹெக்டேரில் தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடி நடக்கிறது. சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ராஜாராம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் பிரபாகர், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.ஜி.சேகர், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மனோகரன், தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராமதாஸ், தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in