

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான மாங்காய்களில் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டிற்கு 1,32,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு சுவை மிகுந்த அல்போன்ஸா, தோதாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் விளை விக்கப்படுகிறது. மா விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு லட்சக் கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டில் மாமரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியதில் இருந்தே பூச்சி தாக்குதல், வெயிலின் தாக்கம், சிண்டிகேட் விலை உள்ளிட்டவை யால் விவசாயி களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாரான மாங்காய்களில் பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், மகசூலில் 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு இன்னல்கள்..: இது குறித்து மா விவசாயிகள் பாதுகாப்பு இயக்க தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, நிகழாண்டில் மாமரத்தில் வழக்கத்தைவிட பிப்ரவரி மாத இறுதியில் தான் அதிகளவில் பூக்கள் பூத்தன. இதனால் ஒரு சில மரங்களில் டிசம்பரில் பூத்த கொத்துகளில் காய்களும், மறுபுறம் பூக்களும் இருந்ததால், பூக்களில் இருந்து வெளியேறிய திரவம், காய்கள் மீது படர்ந்து கருப்பு நிற புள்ளிகளுடன் மாங்காய்கள் உள்ளன.
மேலும், நோய் தாக்கம், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தின் குறைவான கொள்முதல் விலை என பல இன்னல்களை விவசாயிகள் சந்தித்தனர். தற்போது மரங்களில் உள்ள மாங்காய்களில் பூஞ்சை நோய் (ஆந்த்ராக்ஸ்) தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களில் 50 சதவீதம் வீணாகி, கீழே விழுந்துள்ளன.
சில விவசாயிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளான மாங்காய்களை, அறுவடை செய்து சாலையோரங்களில் கொட்டினர். நிகழாண்டில் மா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.