

புதுச்சேரி: அர்னாப் புயல் காரணமாக, ஏனாமில் 101 ஹெக்டேரில் நெற்பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மின்சார விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களாக மின்சாரம் இல்லை. 500 மரங்கள் வரை சரிந்து விழுந்தன. அரசு கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன என ஏனாம் பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா, புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கனுக்கு சேத நிலவர விவரத்தை இன்று அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம்: அர்னாப் புயல் ஆந்திரா - ஏனாம் பகுதியில் தாக்கியது. புயலின்போது 125 கிமீ வேகத்தில் காற்று வீசியது. சிலசமயம் அதன் வேகம் 150 கி.மீ வரை இருந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, கால்நடை இறப்போ ஏனாமில் ஏற்படவில்லை.
மின் பாதைகளின் மீது பல பெரிய மரங்கள் விழுந்ததால், உள்கட்டமைப்பிற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத் துறை பணியாளர்கள் இணைந்து தடைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏனாமில் 101 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த நூறு சதவீத நெற்பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. சுமார் 25 கால்நடை கொட்டகைகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சேதமடைந்துள்ளன.
கிரியாம்பேட்டை, சாவித்திரி நகர் மற்றும் தரியாலதிப்பா ஆகிய பகுதிகளைத் தவிர, ஏனாம் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்களும், 25-க்கும் மேற்பட்ட குறைந்த அழுத்த மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. மேலும், 2 மின்மாற்றிகள் மற்றும் சுமார் 15 கி.மீ நீளத்துக்கு மின் கடத்திகள் சேதமடைந்துள்ளன.
மின் விநியோகம் அக்.27-ம் தேதி மாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதுவரை மின்சாரம் மீண்டும் வழங்கப்படவில்லை. சுமார் 60 தற்காலிகக் குடியிருப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ இடிந்து அல்லது சேதமடைந்துள்ளன.
மேலும், 500-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், கிளைகள் விழுந்ததாலும் பல அரசு கட்டிடங்கள் (சுவர்கள் மற்றும் கட்டிடங்களின் சில பகுதிகள்) சேதமடைந்துள்ளன.
பல படகுகள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பலத்த காற்று வீசி வருவதால், சேதமடைந்த படகுகளின் துல்லியமான எண்ணிக்கையை அதிகாரிகளால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
கனமழையின் காரணமாக, சில சாலை உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு அமைப்பில் அலைபேசி இணைப்பு ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. இணைய இணைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு இன்னும் சீரமைக்கப்படவில்லை. மீண்டும் பலத்த காற்றும் மழையும் தீவிரமாக உள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.