

புதுச்சேரி: "தமிழகத்தை விட புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரேஷனை திறந்து அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தர வேண்டும்” என இடதுசாரிகள் கூட்டாக வலியுறுத்தினர்.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) கட்சியினர் கூட்டாக கலந்து ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம் கூறியது: “சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) கட்சிகள் இணைந்து மக்கள் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து காக்க போராட்டம் நடத்தவுள்ளோம். ஏராளமான பிரச்சினைகளில் முக்கியமானது உணவு பிரச்சினை. விலைவாசி உயர்வு மிக மிக அதிகமாக புதுச்சேரியில் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களில் மட்டும் விலைவாசி உயர்வு 20 சதவீத அளவில் எல்லா பொருட்களிலும் உள்ளது. தீபாவளி வரும் சூழலில் மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.
ரேஷனில் அரிசி போடாமல் நேரடி பணபரிமாற்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். அதையடுத்து ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் ரேஷனில் அரிசி தராமல் நேரடி பணபரிமாற்ற முறையை கொண்டு வருகிறார்கள். அரிசி பதுக்கல் அதிகரித்துள்ளது. கூடுதல் விலைக்கு அரிசி விற்கப்படுகிறது. இது செயற்கை விலையேற்றம்.
சர்க்கரையின் விலையும் தமிழகத்தைவிட புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரூ.55-ல் இருந்து ரூ.65 ஆக சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் புதுவையில் ரூ.85 ஆக உயர்ந்துள்ளது.
காய்கறி விலையும் உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் புதுச்சேரி அரசு தலையிடவேண்டும். வியாபாரிகளை அழைத்து பேசி விலையை கட்டுப்படுத்தவேண்டும். பதுக்கலை தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அரிசி, அத்தியாவசிய பொருட்கள் தரவேண்டும்.
வரும் 31-ல் குடிமைப்பொருள் வழங்கல் துறை முன்பு பெண்களை திரட்டி போராடவுள்ளோம்” என்றார்.
பேட்டியின்போது , சிபிஐ கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், சிபிஎம் மாநில செயலர் ராமசந்திரன், பெருமாள், சிபிஐ (எம்எல்) பாலசுப்பிரமணியன், விஜயா, ஏஐடியூசி அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.