சென்னை | திருமண வீட்டில் திடீர் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிர் தப்பினர்

சென்னை | திருமண வீட்டில் திடீர் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக 20 பேர் உயிர் தப்பினர்
Updated on
1 min read

சென்னை: சென்னை பாண்டி பஜார் யோகாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் பிரமோத் சர்டா(48). இவரது வீட்டில் கடந்த வாரம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. கடந்த 6-ம் தேதி திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்தன. இந்நிகழ்ச்சிக்காக 20-க்கும் மேற்பட்ட உறவினர்கள் திருமண வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் அலங்காரம் செய்யப்பட்ட வீட்டின் முதல் தளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தீப்பொறி ஏற்பட்டது. பின்னர் கரும்புகை வெளியேறித் தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனே தூக்கத்திலிருந்து எழுந்த அனைவரும் கூச்சலிட்டபடி, அங்கு மிங்குமாக ஓடி வெளியேறினர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தி.நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை தீயணைப்புத் துறையினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், வீட்டில் உள்ள படுக்கை அறை முழுவதுமாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in