

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 பேரை விடுவிக்க வலியுறுத்தித் தங்க நகை தயாரிப்பாளர்கள் - மெருகேற்றுபவர்கள் கடைகளை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் கடந்த மாசம் 21-ம் தேதி மதுபானத்தில் 2 பேர் சைனைடு கலந்து குடித்ததால் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு சயனைடு வழங்கியதாகக் கடந்த 15 நாட்களாக, அய்யங்கடைத் தெருவில் தங்க நகைகளுக்கு மெருகேற்றும் பணியில் ஈடுபடும் 11 பேரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை, போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் நேற்று வரை அவர்களை போலீஸார் விடுவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் 2 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியிலுள்ள தங்க நகைகளுக்கு மெருகேற்றுபவர்கள் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர், போலாஸாரை கண்டித்து கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக நகைக் கடைச் சங்கத் தலைவர் எஸ்.வாசுதேவன் கூறியது: " சயனைடு கலந்து குடித்ததால் 2 பேர் உயிரிழந்த, அந்தச் சம்பவம் நடந்த நாட்களிலிருந்து இங்கு வேலை செய்பவர்களைக் காலை முதல் மாலை வரையிலும், சிலரை மாலை முதல் நள்ளிரவு வரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அனுப்பி வந்தனர். இந்நிலையில், நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் எங்குள்ளார்கள் போன்ற எந்த தகவல்களும் இல்லை.
எனவே, அவர்களை விடுவிக்க கோரி வலியுறுத்தி, இந்த தொழில் ஈடுபடும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, வழக்கு தொடர்பாக ஒத்துழைக்கின்றோம், போலீஸார் அழைத்துச் சென்ற 2 பேரை விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரிலுள்ள அனைத்து நகைக் கடைகளையும் அடைத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.