

சென்னை: புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து விநாயகர் சிலையை அப்புறப்படுத்திய மாவட்ட ஆட்சியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.எஸ்.மெர்ஸி ரம்யா, ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்த விநாயகர் சிலையை அப்புறப்படுத்தி உள்ளார். மாவட்ட ஆட்சியர் பதவி நிரந்தரமானது அல்ல என்பதை அவர் உணரவில்லை. மாவட்ட ஆட்சியருக்கான குடியிருப்பு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குச் சொந்தமானது. ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடம் கோயிலுக்குச் சொந்தமானது.
எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் தனது மத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், இவர் எப்படி நடுநிலையாகச் செயல்படுவார் என்று மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், தமிழக அரசு கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான். திமுக ஆட்சிக்கு வந்தபோதே, கன்னியாகுமரியில் கிறிஸ்துவ பாதிரியார் பொன்னையா, இந்த ஆட்சி கிறிஸ்தவர்களால்தான் வந்தது என்று பேசினார். திமுக செயல்பாடுகள் அதை உறுதிப்படுத்துவதுபோல இருக்கின்றன.
காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் கிறிஸ்தவர்கள் நியமிக்கப்பட்டது, யதார்த்தமாக நடந்ததாகத் தெரியவில்லை. அரசுப் பணிகளில் பாரபட்சம் இருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விநாயகர் சிலையை அப்புறப்படுத்திய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.