Published : 05 Jun 2023 09:23 AM
Last Updated : 05 Jun 2023 09:23 AM

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன் | கோப்புப் படம்

மதுரை: ஒடிசா ரயில் விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. நவீனப் பாதுகாப்பு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தியிருந்தால் இவ்விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று குறைந்தபட்சம் மத்திய ரயில்வே அமைச்சராவது பதவி விலக வேண்டும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். விபத்து நடந்த உடன் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

தாக்குதல் புகார்: மதுரை திருமோகூர் கோயில் திருவிழாவின்போது சிலர் பட்டியலின மக்களின் குடியிருப்புக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜூன் 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், திருமோகூர் சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x