தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை: திருமாவளவன்

தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை: திருமாவளவன்
Updated on
2 min read

மதுரை: தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த அவர் ,விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''ஒடிசா ரயில் விபத்தில் சுமார் 300 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் உலக அளவில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு, கவச் என்ற பாதுகாப்பு நவீன தொழில்நுட்பக் கருவியை போதுமான அளவு முறையாக பயன்படுத்தி இருந்தால் இவ்விபத்து தடுக்கப்பட்டிருக்கலாம் என, தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலை விதைப்பது, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவது, ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம் எழுப்புவதில் கவனம் செலுத்துகின்றனர்.

ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது பாஜகவின் செயல் திட்டத்தில் ஒன்று. புதிய பணியாளர்கள் நியமனம் என்பதே இல்லை. ரயில்வே துறையில் தேவையான பணியாளர்களை தொழில்நுட்ப வல்லுனர்களை நியமனம் செய்திருந்தால் இப்படியொரு கோர விபத்து நடந்திருக்காது. ரயில்வே துறையையும் தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உள்நோக்க விளைவு புதிய பணியாளர் நியமனம் போன்றவற்றை செய்யவில்லை. இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என, தார்மீக கருத்தை ஏற்று குறைந்த பட்சம் ரயில்வே அமைச்சராவது பதவி விலக வேண்டும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய புலன் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

விபத்து நடந்த உடன் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. மேலும், விபத்து நடந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டுமின்றி கலைஞரின் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்து 2 அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பியுள்ளார் முதல்வர். மத்திய அரசின் நிர்வாக அலட்சியத்தால் இக்கோர விபத்து நடந்துள்ளது.

மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் கோயில் திருவிழாவில் சாதி வெறியால் சிலர் திட்டமிட்டு பட்டியலின மக்களின் குடியுரிப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை சுற்றுப்பகுதிகளில் சில மாதமாகவே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாதிய மோதல்கள் நடந்துள்ளது.

இச்சம்பவத்திலும் முறையான நடவடிக்கை இல்லை. இவற்றில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும். இதை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஜூன் 12-ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேகதாது அணை கட்டப்படும் என, கர்நாடக துணை முதல்வர் கூறியிருக்கிறார். அந்த மக்களின் உணர்வுகளை புறம் தள்ளிவிட முடியாது. நம் மக்களுக்காக போராட வேண்டியது நம் கடமை. அவர் அணைகட்ட விரும்புகிறார் என, நாம் குற்றம் சொல்ல முடியாது. அணை கட்டுவதில் பாதிப்பு ஏற்படும் என நாம் உரக்கப் பேசுவோம். உரிய இடத்தில் இதை கொண்டு சேர்ப்போம். காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கு விடை சொல்லி இருக்கிறது. முறையிட வேண்டிய இடத்தில் முறையிடுவோம்.

மதுரை விமான நிலையம், முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என, யாரோ கூகுளில் பெயர் பதிவிட்டுள்ளனர். இதை அரசு பதிவிடவில்லை. இது போன்ற செயல் சாதிய அமைப்புகளுக்கு எதிராக இளைஞர்களை தூண்டுகிறது.

தலித் மக்கள் மீதான தாக்குதல் எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துகிறோம். அரசு வழிகாட்டினாலும் உள்ளூரிலுள்ள சூழலுக்கு ஏற்ப காவல்துறை வளைந்து செல்கிறது. இதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு கொண்டிருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து திருமோகூர் மோதல் சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சு. வெங்கடேசன் எம்.பி.யும் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in