100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றம்: சென்னையில் டிச.18-ல் காங். ஆர்ப்பாட்டம்

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை கண்டித்து டிச.18-ஆம் தேதி காலை சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மன்மோகன் சிங் தலைமையில் 2004-ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயரிடப்பட்டது. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.

கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. இதிலிருந்து மகாத்மா காந்தியின் மீது பா.ஜ.க. வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.

எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் எனது தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் முன்னிலையில் 18.12.2025 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், சர்க்கிள் மற்றும் வட்ட கமிட்டி தலைவர்கள் மற்றும் அதன் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதா? - தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in