

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சுமார் ரூ.100 கோடி, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் ரீதியாக வழக்கு விசாரணையைத் தொடர பிரதமர் அலுவலகம் அனுமதியளித்துள்ள தாக மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ரூ. 98.25 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் குற்ற விசாரணை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி பெற தொடர்ந்து மாதக்கணக்கில் தாமதம் செய்வது ஏன் என்பது குறித்தும், தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். பின்னர் இந்த நடைமுறைகளை முடிக்க 2 மாதம் காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இணைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், ‘‘மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல்ரீதியாக வழக்கு விசாரணையைத் தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக வும், அந்த உத்தரவு தமிழக அரசுக்கு ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, மத்திய அரசின் அனுமதிக்கான உத்தரவைப் பெற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டார்.
‘செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக சக்கரம் சுழல மறுக்கிறது’ - நீதிபதி வேதனை
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட மத்திய அரசை வழக்கில் இருந்து நீக்க உத்தரவிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘குற்றவியல் வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான குற்ற வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தொடர மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்கு எவ்வளவு கடினமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம்’’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், ‘‘ஏழை, எளியோருக்கு எதிராக மட்டும் வேகமாக சுழலும் சட்ட நடவடிக்கைகள் என்ற சக்கரம், செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக சக்கரம் சுழல மறுக்கிறது. இந்த நிலையை எட்டுவதற்கு நீதிமன்றம் மிகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.