

கதை ஒன்றுண்டு. தனது மகன்கள், மருமகள்களால் சதா அவமானப்படுத்தப்பட்டு மனங்குமைந்து வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணொருவர், தனது மனக் காயங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பதால் உடல் பருத்துக் கொண்டே போனார்.
அதனால் சித்தம் தடுமாறிக் கால் போன போக்கில் அலைந்தபோது, வனாந்தரத்தில் பாழடைந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த சுவர்களிடம் தான் பட்ட பாடுகளையெல்லாம் சொன்னார்.
அவர் இறக்கிவைத்த பாரத்தைத் தாங்க முடியாமல், சுவர்கள் நொறுங்கின. சுவர்களிடம் பேசிவிட்டதால் மனச்சுமை குறைந்த அந்தப் பெண்ணின் உடல் பருமனும் குறைந்து, நிம்மதியாக வாழ்ந்தார்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த, தங்கமலை ரகசியம் படம் கதை கேட்பவர்கள் படும் திணறலைச் சொன்னது. ஒட்டுக்கேட்கும் பழக்கமுள்ள ஒரு ராஜா, அனைத்தும் தன் காதில் விழவேண்டும் என்கிற பேராசையில் மந்திரக் குளிகையைச் சாப்பிட்டுவிட, அவனுக்குக் கழுதைக்கு இருப்பதுபோல நீண்ட காது முளைத்து விடுகிறது. அந்தச் சேதியானது அரண்மனை நாவிதருக்கு மட்டும் தெரியும்.
அந்த நாவிதர் ராஜாவின் காதைப் பற்றி மனைவிக்குத் தெரிவிக்க, மனைவிக்கோ கணவன் சொன்ன ரகசியத்தை காப்பாற்றத் தெரியாமல் அல்லாடுகிறாள். அதனால் அவள் வயிறு பெருத்துத் தாங்க முடியாத வலியால் அவதிப்படுகிறாள்.
மனைவி படும் சங்கடத்தைப் பார்த்து, அதற்குத் தீர்வாக பூமியில் பள்ளந்தோண்டி அதற்குள் ராஜாவின் காது ரகசியத்தைச் சொல்லிக் குழியை மூடிவிட்டு வந்துவிட்டார் கணவன். அதற்குப் பிறகு மனைவி சுகமடைந்துவிடுகிறாள்.
தம்பதியின் ரகசியத்தைக் கேட்ட பூமாதேவியும் ரகசியத்தைத் தனக்குள்ளே வைத்துக்கொள்ள முடியாமல், அதை ஒரு மரமாக வெளியே வளர்த்துவிடுகிறாள். வித்துவான் ஒருவன் அந்த மரத்தை வெட்டி மிருதங்கம் செய்து, அரசனிடம் சென்றான். ஒவ்வொரு முறை மிருதங்கத்தை அடிக்கும்போதும் ‘ராஜா காது கழுதைக்காது...’ என மிருதங்கம் பேசி, அரண்மனை ரகசியத்தை ஊரறிந்த ரகசியமாக்கி விடுகிறது.
தனது கதையை வெளியே சொல்லாமல் இருப்பவர்கள் அடையும் துயரும், கதைகேட்பவர்கள் படும் சங்கடமுமான இரு நிலைகளுமே மனநலத்துறையின் செயல்பாடுகளுக்குக் கிட்டத்தட்டப் பொருந்தும். ஒருவர் நோய்க்குறிகள் நிறைந்த தன் வரலாறைச் சொல்வதும், அதைச் சிகிச்சையாளர்கள் கேட்பதுமாகத்தான் மனநலத்துறையின் அன்றாடச் செயல்பாடு நகர்கிறது.
இருநூறு வருடங்களுக்கு முன்பாக பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட சென்னை மனநலக் காப்பகத்துக்கு அடுத்தபடியாக, தென்தமிழத்தின் முக்கியமான தேனி அரசு மனநல மருத்துவநிலையமும் கடந்த ஜுலை மாதம் வரை ஜீவனில்லாமல் இருந்தது.
அங்கே சில வருடங்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் சக மனநல மருத்துவரான ராஜேஷ் கண்ணன், ‘வெற்றுச்சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் சொல்ல முடியாத அலுப்புக்கு ஆட்படுவதாகச்‘ சொன்னார்.
நாங்களிருவரும் பேசுகையில் ‘வர்ணங்கள் மனச்சோர்வைப் போக்கும் மூளைச்சூட்டினைத் தணிக்கும்‘ என்பதற்கான சில சாதகமான அறிவியல் ஆய்வுகள் இருப்பது தெரியவந்தன. அதனால் மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச்சுவர்களை முதலில் சரிசெய்யலாம் எனத் திட்டமிட்டோம்.
கலை ஆர்வலரும் சினிமா தயாரிப்பாளருமான சீனிவாசன் பெருமாள்சாமியை அணுகியபோது, ‘கலை ஒரு சிகிச்சையாகட்டும், சுவர்களில் சித்திரம் பேசட்டும். பார்ப்பவர்களுக்குச் சிந்தைத் தெளியட்டும்‘ என்று சொல்லி நிதியுதவி செய்தார். அடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா திட்டத்துக்கு ஒப்புதலளித்தார்.
செப்டம்பர் 10 உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகவும், அக்டோபர் 10 உலகமனநல நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது . அந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் மனநல மருத்துவமனையின் சுற்றுச் சுவர்களெல்லாம் பழுதுபார்க்கப்பட்டு, சென்னை கவின்கலைக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன், அவருடைய மாணவர்களின் நேர்த்தியான ஓவியத் தீற்றல்களால் சுவர்கள் கலைநயத்துடன் மிளிர்ந்தன.
இப்படியாகத் தமிழ்நாட்டின் கற்காலப் பாறை ஓவியங்கள், மரப்பாச்சிப் படங்கள், மகாராஷ்டிராவின் வார்லி ஓவியங்கள், கோண்டு பழங்குடியினரின் ஓவியங்கள், வான்கா, பிக்காசோ பாணியிலான மாடர்ன் ஆர்ட் என்று கலவையாக வந்துசேர்ந்துவிட்டன.
மருத்துவமனைக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பவர் சார்லி சாப்ளின்தான். சாப்ளின் தாய் மனநோய்க்கு ஆளாகி, மனநலக்காப்பகத்தில் இருந்தவர். அந்தக் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்து உலக மக்களையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சாப்ளினின் ஆளுமை வசீகரமானது. அதனாலயே அவருக்கு வளாகத்தில் முக்கியமான இடத்தைத் தேர்வுசெய்தோம்.
மனநல மருத்துவர்களான அருண் வெங்கடேஷ், ராமச்சந்திர பாபு, பரத்ராஜா, ஐஸ்வர்யா, ஈநாக், சந்திர ஜோதி, நர்மதா, செவிலியர் செல்வக்குமார், ஜோயல் சிவதாசன், கவி, மகி, ஆதிரன், வசுமித்ர ஆகியோர் செய்த உதவிகளும் குறிப்பிடத்தக்கன.
கலைக்கும் மனநலத்துறைக்கும் நெருக்கமான சம்பந்தமுண்டு. மருத்துவமனையில் மேலும் சித்திரங்கள் வரையப்படுவதற்குப் பல சுவர்கள் மீந்திருக்கின்றன. உதவி கிடைத்தால் அவையும் சிகிச்சைக்குப் பலனளிக்கும்.
- சஃபி, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், தேனி அரசு மனநல மருத்துவ நிலையம்.
படங்கள்: தாரிக்