

‘இவ்வளவு சிறிய வயதில் இப்பேர்ப்பட்ட இசை ஞானம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவன் ஒன்பது வயது சிறுவன் என்று இவர்கள் சொல்வது பொய். இவனுக்கு வயது அதிகமாக இருக்கும்.’
ஆஸ்திரியாவில் பிறந்த இசை மேதை மொஸார்ட் பற்றிப் பலரும் அப்படித்தான் பேசிக்கொண்டார்கள். மூன்று வயதிலேயே இசைக்கருவியை மீட்டினானாம்.
ஐந்து வயதிலேயே பாடல்களை இயற்றினானாம். எட்டு வயதிலேயே சிம்பொனியை உருவாக்கினானாம். இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது? அவன் தந்தை லியோபோல்ட் பொய் சொல்கிறார் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
மொஸார்ட்டின் ஒன்பது வயதில், அவர் குடும்பம் லண்டனுக்குச் சென்றது. அங்கிருக்கும் தி ராயல் சொசைட்டியைச் சேர்ந்தவர்கள், மொஸார்ட்டின் திறமையைச் சோதனை செய்ய டெய்னெஸ் பேரிங்டன் என்கிற வழக்கறிஞரை நியமித்தனர்.
ஒரு துணியால் பியானோவின் வாசிக்கும் கட்டைகளை மூடி, வாசிக்கச் சொன்னார் டெய்னெஸ். மொஸார்ட் தடுமாறுவார் என்றே பலரும் நினைத்தார்கள். அவர் விரல்களோ துணியின் மீதே கட்டைகளில் விளையாடின. சுருதி தவறாமல் இசை அந்த அறையை நிறைத்துக்கொண்டிருந்தது.
அப்போது அந்த அறைக்குள் ஒரு பூனை வந்தது. மொஸார்ட்டுக்குப் பூனைகள் என்றால் பிரியம். வாசிப்பதை நிறுத்திவிட்டு, பூனையை நோக்கிச் சென்றார். டெய்னெஸ், மொஸார்ட்டை அழைத்தார். ஆனால், அவருக்குப் பூனையைப் பிரிய மனமில்லை. மீண்டும் பியானோவை நோக்கி அவரை அழைத்து வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.
மொஸார்ட்டும் அவரின் குடும்பமும் ஏமாற்றவில்லை. அவர் பூனையைக் கண்டால் ஓடும் குழந்தைதான். ஆனால், பிஞ்சிலேயே இசையில் மேதாவி ஆனவர் என்கிற விஷயம் டெய்னெஸுக்குப் புரிந்தது. பூனைகள் மீது மட்டுமல்ல, பாடும் திறன் கொண்ட பறவைகள் மீதும் மொஸார்ட் பிரியம் வைத்திருந்தார்.
‘மிஸ்டர் கேனரி எப்படி இருக்கிறார்? அவர் இப்போதும் அந்த பைப்பின் மீது அமர்ந்து கொண்டு பாடுகிறாரா? நான் ஏன் கேனரியை நினைக்கிறேன் என்றால், இப்போது நான் இருக்கும் இடத்தின் முன் அறையிலும் அவரைப் போலவே இசைக்கும் ஒருவர் இருக்கிறார்.’
இப்படித் தன் சகோதரி நானெர்லுக்கு எழுதிய கடிதத்தில் வீட்டில் வசித்த கேனரி பறவை (பாடும் மஞ்சள் பறவை) குறித்து நலம் விசாரித்திருக்கிறார் மொஸார்ட். இது தவிர, ஒரு குதிரை வளர்த்திருக்கிறார். மனத்தை உற்சாகப்படுத்த குதிரை சவாரி அவருக்கு உதவியது. இரண்டு நாய்களையும் வளர்த்திருக்கிறார்.
மொஸார்ட்டுக்கு மிகவும் பிரியமான செல்லமாக வரலாற்றில் பதிவாகியிருப்பது ஒரு வகை மைனா (Starling). மொஸார்ட் கடைக்குச் சென்றபோது, அங்கே இருந்த மைனா ஒன்று இசையோடு குரல் எழுப்பியது. அதைக் கேட்டதும் அவர் திகைத்து நின்றார். பறவை எழுப்பிய அந்தக் குரலை மீண்டும் தனக்குள் இசைத்துப் பார்த்தார்.
கண்கள் விரிய அந்தப் பறவையை ஆச்சரியத்துடன் நோக்கினார். உடனே அந்த மைனாவை விலை கொடுத்து வாங்கி, தன் வீட்டுக்கு எடுத்து வந்தார். ஏன்? அந்தப் பறவை இசைத்ததும், மொஸார்ட் எழுதிய இசைக்குறிப்பு ஒன்றும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது.
தான் இயற்றிய இசைக்குறிப்பு எப்படி இந்த மைனாவுக்குத் தெரியும், அதைப் போலவே இசை எழுப்புகிறதே என்று அவருக்கு ஆச்சரியம். மொஸார்ட் தனது தினசரிச் செலவுக் கணக்கு எழுதும் புத்தகத்தில் 1784, மே 27 அன்று மைனாவை வாங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் ஒரு சர்ச்சை உண்டு. மைனாவை வைத்துதான் மொஸார்ட் அந்த இசைக் குறிப்பை எழுதினார் என்று சிலர் சொல்கி றார்கள். மொஸார்ட் அந்த மைனாவை வாங்கிவந்து, தனது இசைக்குறிப்பைப் பாடுவதற்குப் பயிற்சி கொடுத்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், மொஸார்ட் அந்த இசைக்குறிப்பை 1784, ஏப்ரல் 12 அன்றே எழுதிவிட்டார்.
தனது 17வது பியானோ இசை நிகழ்ச்சிக்காக அவர் இயற்றியிருந்த கடைசிக் கோவையின் ஒரு சிறு பகுதியைப் போலவே அந்த மைனாவும் பாடியது. அதில் கவரப்பட்டுதான் அவர் அந்த மைனாவை வாங்கி வந்து வளர்த்தார் என்பதே உண்மை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மூன்று ஆண்டுகள்வரை அந்த மைனா மொஸார்ட் உடன் இருந்தது. 1787, ஜுன் 4 அன்று மைனா இறந்தது. மொஸார்ட் கண்ணீர் சிந்தினார். தனக்கு நெருங்கியவர்களை எல்லாம் அழைத்து, அந்தப் பறவைக்கு இரங்கல் கூட்டம் நடத்தினார்.
அதன் இறுதிச் சடங்குகள், மொஸார்ட்டின் தோட்டத்தில் நடந்தன. அந்த ஸ்டார்லிங் பறவையின் கல்லறையில், அதற்காக மொஸார்ட் எழுதிய கவிதையும் பொறிக்கப்பட்டது.
‘ஒரு மைனா இங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது’ என்று தொடங்கும் அந்தக் கவிதையில் மொஸார்ட் தன் செல்லப் பறவைக்காக உருகியிருக்கிறார். மொஸார்ட் அதற்குப் பிறகு ஒரு கேனரி பறவையை வளர்த்தார்.
அதுவும் அழகாகப் பாடியது. அவரின் துன்பங்களுக்கு இசைத் தோழனாக இருந்தது. முப்பத்தைந்து வயதிலேயே (1791) மொஸார்ட் மரணப் படுக்கையில் விழுந்தார். கேனரி அங்கே அவருக்காக இசைத்தது.
கனத்த மனதுடன் மொஸார்ட் அந்த வார்த்தை களைச் சொன்னார்: ‘இந்தப் பறவையை எடுத்துச் சென்றுவிடுங்கள். அதன் இசை எனக்குச் சுமையாக இருக்கிறது.’
(சந்திப்போம்)
- writermugil@gmail.com