

கிராம மக்கள் காலங்காலமாக ஈடுபட்டு வரும் வேளாண் தொழிலிலும் கால மாற்றத்துக்கு ஏற்பப் பயிரிடும் பயிர்கள், சாகுபடி, பராமரிப்பு, அறுவடை செய்யும் முறை போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வேளாண் தொழில் ஆண்களுக்கு மட்டுமே உரித்தான தொழில் என்பது பொதுவான கண்ணோட்டம். ஆனால், சங்க காலந்தொட்டு இன்றுவரை வேளாண் தொழிலில் அதிகப்படியான பங்களிப்பைச் செலுத்துவது பெண்களே. கிராமங்களில் வேளாண் பணிகள் தீவிரமாக நடைபெறும்போது இதைக் காணலாம்.
வேளாண் தொழிலைப் பொறுத்தவரை விதைப்புக் காலம் தொடங்கி அறுவடைக் காலம் வரையில் ஆண்களுக்கு நிகராகவும் மிகையாகவும் பெண்கள் முக்கியத்துவம் கொண்டவர் களாக இருந்துவருகின்றனர். வேளாண் தொழிலில் விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல் எனப் பெரும்பாலான நிலைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
கடந்த காலத்தில் அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவை தொடர்பான பணிகளை அறிந்தவர்களாகவும் அப்பணி களைச் செய்பவர்களாகவும் பெண்கள் இருந்தனர். அதனால் அந்தந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்களே வேளாண் பணிகள் அனைத்தையும் செய்து முடித்தனர். அப்போது பெண்களுடன் ஆண்களும் வேளாண் பணிகளில் ஈடுபட்டனர்.