ஓவியக் கண்காட்சி: பீறிடும் கீற்றுகள்!

ஓவியக் கண்காட்சி: பீறிடும் கீற்றுகள்!
Updated on: 
1 min read

ஆண்டுகள் ஆக ஆக அனுபவங்கள் பெருகும், அவற்றின் அடிப்படையில் உலகை நோக்கும் பார்வையும் மாற்றம் காணும். கலைஞர்களின் வாழ்வில் இதனைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் பீறிடும் கீற்றுகள் போல, ஓரிடத்தில் ஒன்றாகப் பயின்றவர்கள் மீண்டும் கலைப்பார்வையோடு ஒன்றுகூடினால் எப்படியிருக்கும் என்கிற எண்ணத்திற்கான பதிலாக அமைந்தது ‘அன்பவுண்ட் ஜங்சர்’ (UNBOUND JUNCTURE) கண்காட்சி.

சென்னை லலித்கலா அகாடமியில் கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கிய இந்தக் கண்காட்சி அக்டோபர் 22 வரை நடக்கிறது. இதில், 1990 – 1995ஆம் ஆண்டு சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயின்ற 22 மாணவர்கள் 32 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதில் பங்கேற்றவர்கள் தங்களது கல்லூரி நினைவுகளை, அந்தக் காலக்கட்டத்து நட்புறவுகளை, அதன்பிறகான வாழ்க்கை நிகழ்வுகளை அசைபோடுவதோடு அவரவர் படைப்பாக்கத்தில் நிகழ்ந்த மாற்றங்களை விவாதிப்பதற்கான மேடையாகவும் இது இருக்கும் என்றெண்ணத் தூண்டியது.

ஒன்றுக்கு மற்றொன்று வித்தியாசமான படைப்புகளைக் காணும்போது, அவர்களது பார்வைகளையும் எண்ணங்களையும் படைப்பாக்கப் பாணியையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. ஒருவர் அல்லது சில கலைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தும்போது பார்வையாளர்களிடத்தில் ஏற்படுகிற தாக்கத்தைக் காட்டிலும், இதுபோல பல கலைஞர்கள் கைகோக்கும்போது நிகழ்கிற தாக்கம் அதீதமாக இருக்கும். அப்படியோர் அனுபவத்தைத் தந்தது அன்பவுண்ட் ஜங்சர்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பின்தொடரும் ரசனையாளர்களோடு புதிய பார்வையாளர்களும் இணைவது இது போன்ற கண்காட்சிகளின் சிறப்பு. இது போன்ற கூடுகை தொடரும்போது, படைப்பாக்கத்தின் எல்லை மேலும் ஒருபடி நகர்வது நிச்சயம்.

ஓவியக் கண்காட்சி: பீறிடும் கீற்றுகள்!
The Insult: வார்த்தைகளின் முக்கியத்துவம் | சினிமாவும் அரசியலும் 53

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in