

ஒரு காலத்தில் திரையரங்கம் மிகவும் பிரபலமாக இருந்தது. கள்ளிகுளம் கனகா திரையரங்கில் வெளியான முதல் படம் கருணாமூர்த்தி. இது பக்திப் படம். பிறகு வந்தது சிவாஜி நடித்த கிரஹப் பிரவேசமும் எம்.ஜி.ஆர் நடித்த குலேபகாவலியும் என்றெல்லாம் மலரும் நினைவுகளைப் பகிர்ப வர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.
பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள எங்கள் வீட்டின் சுவரில் சுவரொட்டி ஒட்டுவார்கள். அதனால் எங்களுக்குத் திரைப்படம் இலவசம். ஒவ்வொரு தெருக்குழாய் அருகிலும் உள்ள சுவரில் கண்டிப்பாகச் சுவரொட்டி ஒட்டுவார்கள். மீன்கடைத் தெருவில் மாணிக்கம் வீட்டில் ஒட்டுவார்கள். அவர் அம்மாவுக்கு வாசிக்கத் தெரியாது என்பதால் யாராவது வரும்வரை அங்கேயே நின்று, என்ன படம் என்பதைத் தெரிந்துகொள்வார். மறக்காமல், எல்லா நாளும் படம் பார்ப்பார்.
காலையில் சுவரொட்டி எப்போது ஒட்டுவார்கள் என்று காத்திருந்தது ஒரு காலம். ‘இன்றே இப்படம் கடைசி’ என்று ஒரு ஸ்டிக்கரைப் படத்தின் சுவரொட்டியில் ஒட்டுவார்கள். அது பலரைப் பரபரப்பாக்கி விடும். ‘புரட்சித் தலைவரின் அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்’, ‘நடிகர் திலகத்தின் ‘குணச்சித்திர வேடங்களில்...’,‘டி ராஜேந்தர் பாடல்கள் பத்து, அவை அனைத்தும் முத்து’ என நம்மைச் சுண்டி யிழுக்கும் வகையில் சுவரொட்டிகள் இருக்கும்.
திரையரங்கில் மாலை ஆறு மணிக்கு ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிக்கும். அது ஊர் முழுக்கக் கேட்கும். திரைப்படம் பார்க்க வேண்டியவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வார்கள். சுமார் பதினைந்து பாடல்கள் ஒலிக்கும். தினமும் வரிசை மாறாத அதே பாடல்கள்.