ஐசிஎஃப் அணியில் உச்சம் தொட்டவர்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 18

ஐசிஎஃப் அணியில் உச்சம் தொட்டவர்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 18
Updated on: 
3 min read

முதன்முறையாக இந்தியாவுக்காக விளையாடி, 1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம், தொடர்ந்து இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (1990 & 1994) தங்கப் பதக்கம், அர்ஜுனா விருது... இவை அனைத்தும் ராஜரத்தினத்துக்குக் கிடைத்தது அவர் சென்னையிலுள்ள ஐசிஎஃப் அணிக்கு விளையாடும் போதுதான்!

“1984லிருந்து 1997 வரை ஐசிஎஃப்இல் வேலை பார்த்ததை மறக்க மாட்டேன். எனது கபடி வாழ்க்கையின் பெரிய சாதனைகள் எல்லாம் நான் ஐசிஎஃப் பிளேயராகச் செஞ்சவைதான்” என்கிறார் ராஜரத்தினம்.

இந்தியா முழுவதும் இருக்கும் ரயில்வே பிரிவுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானவை. டைகர் ராஜரத்தினம் வேலைக்குச் சேர்ந்த பிறகு நடந்த முதல் இன்டர்-ரயில்வே கபடி போட்டியிலேயே வாகை சூடியது ஐசிஎஃப்.

அதற்கு முன் ஐசிஎஃப் அந்தப் பட்டத்தை வென்றதே இல்லை. வட இந்திய ரயில்வே அணிகளின் கைகளில் இருந்த அந்தப் போட்டியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அணியும் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்தவர் ராஜரத்தினம். அவர் தலைமையில், இன்டர்-ரயில்வே கோப்பையைப் பலமுறை ஐசிஎஃப் வென்றது.

அந்த ஐசிஎஃப் அணி தொடர்ந்து வெற்றி பெறுவதற்குப் பயிற்சியாளர் தெய்வசிகாமணியும் ஒரு காரணம். ஐசிஎஃபில் ராஜரத்தினத்தின் சக வீரரும் தெய்வசிகாமணியின் மகனுமான சந்திரசேகரன், அவருடைய அப்பா அந்த அணியை ஒரு மிலிட்டரி யூனிட் போல நடத்தினார் என்கிறார்.

“அவரு அவ்வளவு கட்டுப்பாடோடு இல்லைனா ஐசிஎஃப் இந்தியா முழுவதும் பேர் வங்கியிருக்கது.” தொண்ணூறுகளில் சீனியர் நேஷனல்ஸில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்று முறை பட்டம் வெல்லும்போதும் தெய்வசிகாமணியே பயிற்சியாளராக இருந்தார்.

<div class="paragraphs"><p>லில்லி கீதாஞ்சலி</p></div>

லில்லி கீதாஞ்சலி

இறைவன் கபடிக்கு அளித்த கொடை ராஜரத்தினம் என்கிறார் சந்திரசேகரன். “அவரை மாதிரி இன்னொருத்தர் பிறக்கவில்லை. வட இந்தியாவின் ஆதிக்கத்தை ராஜரத்தினம்தான் உடைத்தார். அவரோட ஆட்டதில் வேகமும் பவரும் தெறிக்கும். ரைடர் கொஞ்சம் அசந்தாலும் பக்கத்துல பேய் மாதிரி வந்து அடிப்பாரு.”

தன்னுடைய அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் விளையாடிய ராஜரத்தினம், ரசிகர்களுக்காகவும் விளையாடுவாராம். “ரசிகர்களை சந்தோஷப் படுத்துவதற்காக டைவ் அடிப்பாரு; ஜம்ப் செய்வாரு. அதனால்தான் நாங்க எங்க போனாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடுவாங்க. கிரிக்கெட்ல சச்சின், தோனிக்கு இருக்கிற மாதிரி ராஜரத்தினத்துக்குத் தனியா ரசிகர்கள் இருப்பாங்க” என்றார் சந்திரசேகரன்.

ஜெய் பவானி என்கிற கபடி கிளப்பை சென்னையில் நடத்தி வரும் சந்திரசேகரன், ராஜரத்தினம் விளையாடிய போட்டிகளில் இதை மறக்க முடியாது, அதை மறக்க முடியாது என்று சொல்ல முடியாது என்கிறார். “அவர் விளையாடிய எல்லாப் போட்டிகளும் எனக்கு மறக்க முடியாதவைதான்!”

முன்னாள் இந்திய வீரரும், ஐசிஎஃபில் ராஜரத்தினத்துடன் விளையாடிய சாமியப்பனின் மனைவி லில்லி கீதாஞ்சலி மதுரையில் கபடியோடு வளர்ந்தவர். அவருடைய அக்கா நவமணி இந்திய அணியில் இடம்பெற்ற முதல் தமிழ்நாட்டு வீராங்கனை. இன்னோர் அக்கா சாந்தா மேரி கபடி மூலம் அஞ்சல் துறையில் வேலைக்குச் சேர்ந்தவர்.

“நாங்க எல்லாருமே ராஜரத்தினத்தின் ரசிகர்கள். அவரோட டீம் ஆடப் போகுதுன்னு அறிவிப்பு வந்தா ஓடிப்போய் முதல் வரிசையில் இடம் பிடிச்சு ஆன்னு வாயைப் பிளந்து பார்ப்போம். அரை மண்டி போட்டு, இரண்டு கைகளையும் விரிச்சு ராஜரத்தினம் விளையாடுவது சூப்பரா இருக்கும். அவரு ஆடும்போது மண்ணுகூட அதிரும். தமிழ்நாட்டு கபடியின் அடையாளம் அவர்” என்கிறார் லில்லி கீதாஞ்சலி.

சாமியப்பன் தன்னுடைய கபடி வாழ்க்கையில் செய்த சாதனைகளுக்கு ராஜரத்தினம் கொடுத்த உற்சாகமும் ஒரு காரணம் என்றார் லில்லி கீதாஞ்சலி. “அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் ராஜரத்தினம் அண்ணன் கிட்ட துளிகூட ஈகோ கிடையாது.”

தெற்கு ரயில்வே வீரராக ஜெகதலன், ராஜரத்தினத்திற்கு எதிராகவும் சீனியர் நேஷனல்ஸ் போட்டிகளில் ஒரே அணியிலும் பல முறை விளையாடி இருக்கிறார்.

“ஐசிஎஃப் அணியைக் கட்டமைச்ச பெருமை அவருக்கு உண்டு. இன்டர் ரயில்வே போட்டியில் ஐசிஎஃப் தொடர்ந்து ஜெயிக்க அவருடைய ஆட்டமும் தலைமையும்தான் முக்கியமான காரணம். பல நல்ல வீரர்கள் ஐசிஎஃப் அணியில் சேர உறுதுணையா இருந்தாரு” என்கிறார் ஜெகதலன்.

<div class="paragraphs"><p>ராஜரத்தினம் -&nbsp;ஜெகதலன்</p></div>

ராஜரத்தினம் - ஜெகதலன்

ஜெகதலனைப் பொறுத்தவரை ராஜரத்தினம் விளையாட்டில் யாரும் குறையே சொல்ல முடியாது. “ரைடு, டிஃபென்ஸ் ரெண்டுலயும் அப்படியே பறப்பாரு. காலைப் பிடிக்கும்போது எப்படித்தான் உருவி ரிலீஸ் செய்வாருன்னு தெரியாது. தலையிலிருந்து கால் வரை எல்லா இடங்களிலும் பல காயங்கள் இருந்தாலும், கபடி விளையாடும்போது எதையும் பொருட்படுத்த மாட்டாரு.”

உடல் உறுதி, மன வலிமை, திறமை இவற்றோடு அற்புதமான கபடி மூளையும் உள்ளவர் ராஜரத்தினம் என்கிறார் ஜெகதலன்.

“ஒரு இன்டர் ரயில்வே ஃபைனலில், தெற்கு ரயில்வேயின் டாப் ரைடரான மணல்மேடு சுப்ரமணியனை ஒரு மாற்று வீரரை வைத்து பிடிக்க வைத்து ஐசிஎஃப்ஐ ஜெயிக்க வைத்ததை மறக்க மாட்டேன். அப்ப இரண்டே டிஃபெண்டர்ஸ்தான் களத்தில் இருந்தாங்க. அவுட் ஆகி வெளியில இருந்த ராஜரத்தினம், ஒரு மாற்று வீரரை இறக்கி சுப்ரமணியனின் தோளில் பாய்ஞ்சு பிடிக்கச் சொன்னாரு; அவரு சொன்ன மாதிரி செஞ்சதால கேம் ஓவர்.

“இன்னொரு இன்டர் ரயில்வே ஃபைனலில், ஒரு ரைடரை 'நீ அவுட் ஆனாலும் பரவாயில்ல; ஜெகதலனையும் இழுத்துக்கிட்டு வெளில போயிடணும்னு' அனுப்பி என்னைக் காலி செஞ்சு, என் டீமையும் காலி செஞ்சாருன்னு” சிரித்தார் ஜெகதலன்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர். தொடர்புக்கு: tnrags@gmail.com

ஐசிஎஃப் அணியில் உச்சம் தொட்டவர்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 18
ராஜரத்தினம் ‘புலி’ ஆன கதை! | ‘டைகர்’ ராஜரத்தினம் 17

X