

தமிழக அரசு நடத்தும் 2026ஆம் ஆண்டுக்கான ‘கண்டிராத கோணங்கள்’ எனும் தலைப்பில், அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பங்கேற்ற மாணவர்களின் தனித்திறமைகளைப் பறைசாற்றும் விதத்தில் ஒவ்வோர் ஒளிப்படமும் சிறப்பாக இருந்தன.
அங்குக் காட்சிப்படுத்தப்பட்ட பெரும்பாலான ஒளிப்படங்கள், மாணவர் களின் பெற்றோர் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கக்கூடியவையாக இருந்தன.அவற்றில் பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியைச் சேர்ந்த ஜெ.குருவிஷ்ணு எனும் மாணவரின் ஒளிப்படங்கள் தனித்துவம்மிக்கவையாக இருந்தன.
அந்த ஒளிப்படங்கள் பெற்றோர், கல்வி, அன்பு, மகிழ்ச்சி என அனைத்தையும் இழந்த, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் செந்தில்குமாரின் வாழ்க்கைமுறையையும் அவருக்கு நேர்ந்த துயரங்களையும் கண்முன் நிறுத்தின.