

சங்க காலத்தில் 'ஆன்பொருநை' என்று அழைக்கப்பட்ட அமராவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது வஞ்சி மாநகர். கால வெள்ளத்தில் இன்று கரூர் ஆகிவிட்டது. சிலப்பதிகாரக் காப்பியத்தின் நாயகன் சேரன் செங்குட்டுவன் உட்பட முற்காலச் சேர மன்னர்கள் சிலர் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். கேரளப் பகுதியிலும் இதே பெயரில் ஒரு ஊர் இருந்துள்ளது.
கரூர் அருகேயுள்ள புகழூர் ஆறுநாட்டார் மலையில் காணப்படும் பாறைக் கல்வெட்டு கள், கரூரை ஆண்ட சேர மன்னர்களின் வம்சாவளியைச் சொல்வதுடன், தமிழி எழுத்தின் தொன்மைக்கு மற்றுமோர் சான்றாக விளங்குகின்றன. இன்னும் பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட கரூர், நிகழ்காலத்தில் காவிரிப் பாசனப் பகுதியின் தலைவாசலாக விளங்குகிறது.
கரூரின் அரவக்குறிச்சி, அதன் சுற்று வட்டாரங்களில் பாசன முறையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் நடைபெறும் முருங்கைக் காய் விவசாயம், ‘முருங்கைக்காய் மையம்’ என்கிற பெயரைக் கரூருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அரவக்குறிச்சி முருங்கைக்காய்களின் ருசியைத் தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளும் அனுபவித்து வருகின்றன. கரூர் மாவட்டத்தில் காவிரிப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்ட மற்றொரு வேளாண் தொழில் குளித்தலையைச் சுற்றிச் சிறந்து விளங்கும் வாழை சாகுபடி.