

சிறுவயதில் தோள்பட்டையின் பின்பகுதியில் சிவந்துபோய் கொப்புளங்கள் வைத்து அந்தப் பகுதியே தீ பட்டது போல் எனக்கு எரிந்தது. அதைப் பார்த்ததும் அப்பா சொன்னார், “இது அக்கி, இதுக்கு நம்ம தங்கவேல் டாக்டர்கிட்ட எல்லாம் போகக் கூடாது. கிட்ணன்கிட்டதான் போகணும்.”
தங்கவேல் டாக்டரைவிட கிட்ணன் பெரிய டாக்டர் என்று நினைத்தேன். ஊரைத் தாண்டி, தோட்டங்கள் தாண்டிக் கரட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு குளம். மழை பெய்தால் அவ்வளவு நீரும் செம்பழுப்பாக ஓடிவந்து அந்தக் குளத்தில் தேங்கும்.
அந்தக் குளக்கரையில் ஒரு குடிசை. அதில்தான் கிட்ணன் இருந்தார். சட்டி செய்வது, கார்த்திகை தீபத்துக்குச் சிட்டி ( அகல்) செய்வது. குதிரை செய்வது, சாமிகளுக்கான வேண்டுதலுக்கு உருவாரம் செஞ்சு தருவது இதெல்லாமும் அவர்தான்.
கெச்சலான உருவம், வாயில் நிரந்தரமான வெற்றிலைச் சிவப்பு. காதில் சிவப்புக் கற்கள் பதித்த கடுக்கனோடு இருந்தார். “வா திருமலு மாப்ள, என்னா மருமகனைக் கூட்டிட்டு வந்திருக்க?” “அக்கி மாதிரி தெரியுது. என்னான்னு பாரு கிட்ணா.”
கிட்ணன் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ”அக்கிதான். எப்பருந்து இருக்கு. காச்சலடிக்குதா?” என்றார். “நேத்திருந்து இருக்கு மாமா… காச்சல் லேசா அடிக்குது.” கிட்ணன் எங்களைக் கயிற்றுக்கட்டிலில் உக்கார வைத்து விட்டு, ஒரு கிண்ணத்தில் செஞ்சாந்துக் குழம்பு போல ஒன்றைக் கொண்டுவந்தார். அதனை அக்கி இருந்த பகுதிகளில் தடவினார்.
“அப்படியே நல்லாக் காயட்டும். வேகமா சரியாயிரும்.” இந்தப் பக்கம் ஒரு களிமண் உருவம் இருந்தது. பெண் உருவம். வண்ணம் பூசாத ஒரு மண் சிலை. “என்னது கிட்ணா இது?” ‘முத்தாலம்மன். தெக்குப்பட்டியில சாமி கும்பிடு இருக்கில்ல. அவங்கெ பத்து வருசமா நம்மகிட்டத்தானே உருவஞ் செய்யிறாங்கெ.”