

காமையன் தொழுவத்தில் பதினாலு மாடுகள். அதன் பின்புறம் வைக்கோலும் சாணமும் கொட்டும் குப்பைக் கிடங்கு. கொசுக் களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், கூழையன் அங்கேதான் கயித்துக் கட்டிலில் படுத்திருப்பான். போர்வை, தலகாணி எதுவு மிருக்காது. கட்டிலில் துண்டைப் போட்டு, கையைத் தலைக்கு அண்டக் கொடுத்துப் படுத்துக் கிடப்பான். வேட்டி ஒதுங்கி, குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்கும்.
“காமையா, உன் கூட்டாளி இம்புட்டுக் கொசுவுக்கு நடுவுல எப்பிடித் தூங்குறான்?” என்று கேட்டதற்கு காமையன், “அவந்தான் கொசு வாயைக் கட்டிர்றான் இல்ல?” என்றான்.
“கொசு வாயைக் கட்டறதா?” “ஆமா. மந்திரம் போட்டுக் கட்டிருவான். பெரிய சூச்சியக்காரன்!“காமையன் சொன்னது நெசந்தான்.
கூழையன் பத்து வயதிலே வீட்டை விட்டு ஓடிப்போனான். தேனிக்கு தெக்கே அவனுடைய ஊர். கால்நடையா தெக்கே கம்பம், கூடலூர் தாண்டி மலை வழியா மேலே ஏறிப் போய்ட்டான். அங்க இருந்த ஏழெட்டுப் பளியக்குடிகளோட தங்கிட்டான்.
அவங்க கூடவே இருந்து, அவங்க குடிக்கிற கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு, தேன் எடுக்கறது, மூலிகை பிடுங்கறது எல்லாம் கத்துக்கிட்டு ஏழெட்டு வருசம் கழிச்சு வேற ஆளா மாறி வந்தான். மலையாளத்துப் பக்கம் போயிட்டு வந்த சூச்சியக்காரன் இல்லையா? கொசு வாயைக் கட்டறது ஒரு கஷ்டமா என்ன?
கொசு மட்டும் கெடையாது. பேய், பிசாசும் அவங்கிட்ட எந்த வம்பும் வச்சிக்கிடாது. அம்புட்டுப் பேயும் பயந்து நடுங்கும். கெழக்குத் தெரு பொம்பளைக ரொம்பப் பாவம். அதுங்க புளியந்தோப்பைத் தாண்டித்தான் ஒதுங்கப் போவாங்க.