

ஊர் கூடி இருந்தது. கோயில் திருவிழா. ஊரில் பஸ் நிற்கும் சற்று அகலமான ரோட்டை ஒட்டி முத்தாலம்மன் கோயில் இருந்தது. திருவிழா வந்தால் ரோட்டை அடைத்துப் பந்தல் போட்டு பஸ்ஸை ஊருக்குள் வராமல் சுற்றிப் போக வைத்துவிடுவார்கள். ரோட்டின் மீதுதான் பொங்கல் வைப்பது, மஞ்சள் தண்ணி அடிப்பது, முளைப்பாரி வைத்துக் கும்மியடிப்பது, மாவிளக்கு எடுப்பது எல்லாமே.
ரோடு முழுக்க மூன்று கல் அடுப்புக்கூட்டி விறகுகளை வைத்துப் பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரே புகை மண்டலம், வெக்கை.
அப்போது பார்த்து வெள்ளை ஊருக்குள் வந்துவிட்டது. காளியம்மன் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட கோயில் காளையே வெள்ளை. ஓங்குதாங்கான வளர்த்தியும் கோயில் கலசம் போலத் திமிலும் நீண்டு வளைந்த கம்பீரமான கொம்புகளுமாகப் பார்த்தவுடன் அச்சம் கொள்ள வைக்கும் ஆகிருதியைக் கொண்டிருந்தது வெள்ளை. நேராக அது பந்தலுக்குள் நுழைந்தது. ஊரின் அத்தனை சனத்துக்கும் கை கால் ஓடவில்லை.
நூற்றுக்கணக்கான அடுப்புகளும் பெண்களும் நிறைந்திருந்த அந்தப் பந்தலின்கீழ் யாரும் சிதறி ஓட வாய்ப்பில்லை. அடுப்புகளின் அனலோடு புகையும் சூழ்ந்திருக்க உள்ளே நுழைந்தது வெள்ளை. பெண்கள் பயத்துடன் ஒதுங்கி நிற்க, அது நின்று எல்லாப் பக்கமும் பார்த்துவிட்டுக் கம்பீரமாக நடந்து பந்தலைக் கடந்து சென்றது. எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அது பாட்டுக்கு நடுவில் புகுந்து ஓடி இருந்தால் என்ன ஆகும்? ஆனால் அந்தச் சூட்டையும் புகையையும் உள்வாங்கியபடி அது நிதானமாக, கவனமாக நடந்து போனது. ஊரின் ராஜாபோல ஒரு கம்பீர நிதானத்துடன்.