

ஓவியம்: முத்து
அட்சய வருடத்து ஆடி மாதம். கோடைக்காற்று விசைகொண்டு வீசிய நாளின் முன்னிரவு. வெள்ளியம்பாளையத்து சரளைத் தோட்டத்து அய்யன், எங்கள் தோட்டத்து வீட்டு வெளித்திண்ணையில் வந்து அமர்ந்தார். அய்யனுக்கு அறுபது வயது இருக்கும். சந்தைக்குப் பாரவண்டி ஓட்டிக்கொண்டிருந்தார்.
சனிக்கிழமை குண்டடம் சந்தைக்கும் திங்கள்கிழமை காங்கயம் சந்தைக்கும் செவ்வாய்க்கிழமை தாராபுரம் சந்தைக்கும் அய்யனின் பாரவண்டி செல்வது வாடிக்கை. எங்கள் சுற்றுவெளியின் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளையும் தானியங் களையும் சந்தைக்கு விற்க அய்யனின் பாரவண்டியில்தான் ஏற்றுவார்கள்.
சந்தை முடிந்து பாரவண்டி ஊருக்குத் திரும்பும்போது மளிகைக்கடைக்காரர்கள் தங்கள் கடைச் சாமான்களை ஏற்றி அனுப்புவார்கள். பெரும் பாலும் சந்தையில்லாத நாளில் எங்கள் வீட்டுக்கு வந்தமர்ந்து பழைய காலச் சம்பவங்களைப் பேசிக்கொண்டிருப்பார் அய்யன். அன்று வண்டிச்சாலை திருடனைப் பற்றிக்கூறத் தொடங்கினார்.
நாங்களும் சுவாரசியத் துடன் கேட்கத் தொடங்கினோம். நாடு சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளே கழிந்திருந்தன. அப்போது தாராபுரத்தின் வடக்கு எல்லை அரசமரம். அந்த அரசமரத்தைச் சுற்றிலும் முஸ்லிம்கள் கறிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.
அதிலிருந்து வடக்கே ஒரு மைல் தூரம் சுங்கம் என்கிற இடம்வரை பனந்தோப்பு. அடர்ந்த பனைமரங்களின் இடையேதான் வண்டிச்சாலை சென்றது. வடக்குவெளி ஊர்களுக்குச் செல்ல ஒரேவழி அந்த வண்டிச்சாலைதான். அப்போது அய்யனுக்கு அரும்புமீசைப் பருவம்.
அந்த வயதிலேயே விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஆவணியிலேயே பருவ மழைக்காலம் தொடங்கியது. அய்யன் தாராபுரம் சென்று மானாவாரி நிலத்தில் விதைக்கச் சடைமஞ்சிச் சோளம், கம்பு போன்ற விதைத்தானியங்களையும் கொள்ளு, நரிப்பயிர் போன்ற விதைப்பயிர்களையும் தானிய மண்டியில் வாங்கினார்.
கூடவே சுற்றுவெளி விவசாயிகளும் விதைத்தானியங்களையும் விதைப்பயிர்களையும் வாங்கி, பாரவண்டி யில் ஏற்றினர். பாரவண்டி ஓட்டியவரின் பேச்சுத் துணைக்கு அய்யனும் பாரவண்டி மூட்டை களின் மீது ஏறி அமர்ந்துகொண்டார்.