

சுபானு வருடத்துக் கார்த்திகை மாதம். பனிக்குளிர் விரவிய இளங்காலை. குமரன்சேரி ஏரிக்கரை மீது அழிஞ்சில் புதர்களும் பனை மரங்களும் மண்டிய வழியில் நடந்தேன். சமீப நாள்களில் பருவமழை பொழியாததால் ஏரிக்கரை வறண்டே கிடந்தது.
ஏரி நீரில் தெரியும் உதயப்பொழுதின் ஒளிச்சிதறலுக்கு மேலாக நாரைகள் பறந்தன. மறுகரையில் ஏரி நீர் வற்றிய காலத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலைக்குக் கோயில் கட்டி பிரதிஷ்டைச் செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது.
வாத்துப்பட்டி வந்தது. வாத்துகளின் ‘குவா குவா’ ஒலியைக் கேட்டபடியே வாத்துக்காரரைத் தேடினேன். சற்றுத் தள்ளிச் சம்புக்கோரைகள் முளைத்த இடத்தில் ஒரு சிறிய பனையோலைக் குடிசை தெரிந்தது.
குடிசைக்குள் வாத்துக்காரர் விறகு மூட்டிய கல்லடுப் பில் ஈயச்சட்டி வைத்து அரிசிச் சாதம் சமைத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் குடிசைக்கு வெளியே வந்து கும்பிட்டபடியே பேசினார்.
“இன்னிக்கு நீங்க வருவீங் கன்னு எதிர்பார்த்தேன்… ஆனா, இவ்ளோ வெள்ளனே வருவீங்கன்னு எனக்குத் தெரியாது…” வாத்துக்காரருக்கு முப்பது வயதுதான் இருக்கும். மாநிறத் தில் அளவான உயரம். அடர்ந்த சுருள்முடி. சிறிய மீசை.
முண்டாசுப் பனியனும் கைலியும் உடுத்தியிருந்தார். குடிசைக்கு முன்பான மண்தரையில் உரச்சாக்குகளை விரித்துப் பரப்பி என்னை உட்கார வைத்தார். வாத்துக் காரரும் எதிராக உட்கார்ந்துகொண்டார். வீசும் வாடைக்காற்றில் வாத்துகளின் எச்சவாசம் அடித்தது.
ஏரி நீர்ப்பரப்பில் நீந்தும் முக்குளிப்பான்களைப் பார்த்தவாறே சிறுகணப்பொழுது மௌன மாகக் கடந்தது. நான் வாத்துக்காரரின் பக்கம் திரும்பிக் கேட்டேன். “இப்ப உங்க மனைவியும் மகனும் எங்கிருக்கிறாங்கன்னு தெரியுமா?” “பண்ரூட்டி பக்கம் இருக்கறதாகத் தகவல் கெடைச் சுச்சு. அங்கேயும் போயி தேடிப் பார்த்தேன். கெடைக் கலை.”