

முன்பு எங்கள் ஊர்வெளிக்குக் கார்மழை, கோடைமழை, பருவமழை என முப்போகமும் மழை பொழிந்தபடி இருந்தது. சதாகாலமும் நிலம் நீர் ஊறிக் கிடந்தது. மானாவாரி விவசாயிகள் ஈரமண்ணுக்குத் தோதான வெள்ளாமை வைக்க முடியாமல் அவதியுற்றனர்.
நீர்படிந்த பசும்புற்களை மேய்ந்து மேய்ந்து செம்மறியாடுகள் வாய்ப்புண் கண்டு செத்துப் போயின. கட்டுத்தரையில் பசுமாடுகள் படுத்துறங்க முடியாமல் நின்று நின்று கால்கள் வீங்கி மடிந்தன. மிகுமழையின் வீரியத்தைத் தாங்க முடியாத மானாவாரி விவசாயிகள் ஒன்றுதிரண்டனர்.
சிற்றரசன் கொங்குராஜன் தலைமையில் மதுரைக்குப் புறப்பட்டனர். அரண்மனைக்குச் சென்று பாண்டிய மகாராஜாவிடம் முறையிட்டனர். “மகாராஜா, எங்களால் இனி இவ்வளவு மழையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நீங்கள்தான் எங்கள் ஊர்வெளியைக் காப்பாற்ற வேண்டும்.”
பாண்டிய மகாராஜா யாகத்துக்கு ஏற்பாடு செய்து வருண பகவானிடம் வேண்டினார். “வருண பகவானே… எங்கள் தேசத்துக்கு இரண்டு போகம் மழை பொழிந்தாலே போதும். மூன்று போகத்தை எங்கள் பூமி தாங்காது. நீங்கள்தான் ஒருபோகம் மழையை நிறுத்த வேண்டும்.”
வருண பகவானின் அசரீரி ஒலித்தது. “மழைக்கு அதிபதியான நானே மழையை நிறுத்தக் கூடாது. வேண்டு மென்றால் குறைத்துவிடு கிறேன். உங்களுக்கு எந்தப் போகத்து மழையைக் குறைக்க வேண்டும்?” பாண்டிய மகாராஜாவின் வாயில் கோடைப் போகம் என்று வந்துவிட்டது. வருண பகவானும் அப்படியே வரம் கொடுத்தார்.
“பாண்டிய மகாராஜன் தேசத்துக் குக் கோடைமழை பனிபோல் பெய்யட்டும்.” அன்றிலிருந்து மலையாள தேசத் தில் கனமழை பொழிந்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக் காட்டுக் கணவாய் வழியாக வரும் கோடைக்காற்று கருமுகில்களை வெறுமனே சுமந்து கடந்தது.
வைகாசியிலிருந்து ஆவணிவரை மிகுதியாகப் பொழியவேண்டிய கோடைமழையும் பனிபோல் பொழிந்தது. கிணறுகள் நீர்வற்றிப் போயின. எங்கும் வறட்சி சூழ்ந்தது. கோடைக்காற்றுச் சூறைக்காற்றாக விசைகொண்டு எழும்பிற்று. மானா வாரி நிலமெங்கும் புழுதியும் சருகுகளும் பறந்தன. காய்ந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தோட்டவெளிகள் செம்புழுதி ஆயின.